நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் 108 மி.மீ மழை பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக  மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையில் 108 மி.மீ மழை பதிவானது

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கார் மற்றும் பிசான பருவ சாகுபடிகள் நடைபெற வில்லை. விவசாயிகள் நாற்று பாவிய நிலையில் அவை கருகி உள்ளன. மானாவாரி பயிர்களும் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளன.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கிடும் பணியில் ஈடுபட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியை கண்டுள்ளது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி வறண்டு போகும் நில உண்டாகி உள்ளது. ஆற்றில் பாறைகள் தென்படும் அளவுக்கு தண்ணீர் அளவு குறைந்தது.இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களிலேயே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை பெய்தது. அம்பை, ஆய்க்குடி, சேரன்மகாதேவி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.குறிப்பாக பாபநாசம் மலைப்பகுதியில்  சனிக்கிழமை  இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியது. நேற்று 21.90 அடியாக இருந்த இந்த அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 6.1 அடி உயர்ந்து இன்று காலை 28 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1786 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 104 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இங்கு அதிகபட்சமாக 108 மில்லிமீட்டர் மழை பதிவானது.இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 61.55 அடியாக இருந்தது. இன்று இது 70.21 அடியாக அதிகரித்து உள்ளது. இந்த அணைப்பகுதியில் 59 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 33.80 அடியாக இருந்தது. இன்று இது 34.50 அடியாகி உள்ளது. இங்கு 46 மில்லிமீட்டர் மழை பதிவானது. மற்ற அணைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அணைப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:அம்பை 33.20, கருப்பாநதி 28, சேரன்மகாதேவி 20, கருப்பாநதி 14, நாங்குநேரி 13, ராமநதி 10, தென்காசி 9.6, செங்கோட்டை 7, அடவிநயினார் அணை 7, நெல்லை 6.4, பாளை 6, சங்கரன்கோவில் 6, சிவகிரி 5, கடனா அணை 5 என பதிவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்: