மகாராஷ்டிராவில் பா.ஜ. அரசு கவிழுமா ? கூட்டணி கட்சி சிவசேனா மிரட்டல்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      அரசியல்
shiv sena(N)

மும்பை  - மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்திருப்பதையொட்டி பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. மாநிலத்தில்  மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சிவசேனாவுக்கு கடும் போட்டியாக பாரதிய ஜனதா களம் இறங்கியுள்ளது. அதனால் முதல்வர் தேவேந்தரா பட்னாவிஸ் தலைமையில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசில் மோதல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை எதிர்த்து பாரதிய ஜனதா கடும் போட்டியில் இறங்கி இருப்பதால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர் உத்தரவு பிறப்பித்தால் உடனே அமைச்சரவையில் உள்ள அனைத்து சிவசேனா அமைச்சர்களும்  ராஜினாமா செய்துவிடுவோம். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில் பாரதிய ஜனதா அரசு மெஜாரிட்டியை இழந்து கவிழ்ந்துவிடும் என்று சிவசேனா செய்தி தொடர்பாளர் மணிஷா கயாண்டி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மும்பை மாநகராட்சி செயல்பாடு சரியில்லை என்றும் கூறும் பாரதிய ஜனதா, மாநிலத்தில் ஏன் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியின் பலன்களை அனுபவிப்பதற்காகவா என்றும் கயாண்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேபினட் கூட்டம்:
அமைச்சரவை கூட்டத்தில் எங்களை எதுவும் சொல்லவிடுவதில்லை. அமைச்சரவை கூட்டமும் வெளிப்படையாக இருப்பதில்லை. பாரதிய ஜனதா அரசு தனது எதேச்சதிகார போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறது. அதனால் எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேயின் கட்டளைக்காக காத்திருக்கிறோம். அவர் கட்டளையிட்ட மறு வினாடியே சிவசேனா அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிடுவோம் என்றும் கயாண்டி தெரிவித்தார்.

மக்கள் வெறுப்பு:
பாரதிய ஜனதா அரசு மீது மகாராஷ்டிரா மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் எதையும் அரசு செயல்படுத்தவில்லை. எங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை கட்சியிலும்  அரசிலும் சேர்த்துள்ளனர். அதனால் மக்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். எங்கள் தலைவர் உத்தவஜி மீது முதல்வர் பட்னாவிஸ் தவறான வார்த்தைகளால் வசை பாடிவருகிறார். ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உத்தவ்ஜி மீது பட்னாவிஸ் கூறுகிறார் என்றும் கயாண்டி மேலும் கூறினார்.

இந்தநிலையில் பாரதிய ஜனதாவுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க தயாரா? என்று சிவசேனா கட்சிக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. மாநிலத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. இதனால் சிவசேனா ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டால் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: