முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      தேனி
Image Unavailable

போடி, - தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மக்களை நேரில் சந்திக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், அ.தி.மு.கவினரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பிப்.07-ம் தேதி முதல் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் தலைமையிலான அணியில் முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர். தனி அணி தொடங்கிய பின்னர் முதன்முறையாக சொந்த மாவட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவான பிறகு குலதெய்வக் கோவிலுக்கு வழிபட ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார் ஓபிஎஸ். ஆண்டாள் கோவில், குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் சொந்த ஊருக்கு வந்தார்.
 தனி அணியாக உருவான பின்னர் முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்துக்கு வந்தார். ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். ஏராளமான வாகனங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அணிவகுத்து சென்றனர்.
 ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன் பட்டியில் முத்துராமலிங்கதேவர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டு, தான் வெற்றி பெற்ற போடி சட்டமன்ற தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார். செல்லும் வழியெங்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியகுளம், தேனி அல்லிநகரம், கோடாங்கிப்பட்டி, மீனாட்சிபுரம், போடி உள்பட பல்வேறு1 இடங்களில் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அல்லிநகரம் வரை 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அணிவகுப்பு வரவேற்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
 போடியின் எல்லையில் அமைந்துள்ள சாலை காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள். அங்கிருந்து திறந்த வெளி வாகனத்தில் சென்று போஜன் பார்க், கட்டபொம்மன் சிலை, தேவர்சிலை வழியாக பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அ.தி.மு.க நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பழைய பேருந்து நிலையம் வழியாக வ.உ.சி சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் சென்று நன்றி தெரிவித்தார். செல்லும் வழியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்துக்கு வந்த போதும் இவ்வளவு வாகனங்கள் அவருடன் அணிவகுத்து வந்தது கிடையாது. மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்கு வந்த நாட்களில் கூட இவ்வளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்