முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் : 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா - இரட்டை சதம் அடித்து புஜாரா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டைச் சதம் எடுக்க, சஹா சதத்தை அடிக்க, ஜடேஜாவின் அதிரடி அரைசதத்துடன் இந்தியா 4-ம் நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியாவின் வார்னர், லயன் விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்து கடும் சிக்கலில் உள்ளது.

அவுட்

4-ம் நாளான நேற்று இந்திய அணி 360/6 என்று தொடங்கியது, இதில் புஜாரா 130 ரன்களுடனும் சஹா 18 ரன்களுடனும் களமிறங்கினர். கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விருத்திமான் சஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஓகீப் பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

புஜாராவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்தனர். இதில் சஹாவின் ஸ்ட்ரைக் ரேட் டெஸ்ட் இன்னிங்ஸுக்கான சரிவிகிதத்தில் இருந்தது, அதாவது 50.21சதவீதம்  இது சஹாவின் ஒரு மிக முக்கியமான, அருமையான சதம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் புஜாரா சாதனையான 525 பந்துகள் நின்றார். 38.47 சதவீதம்  தான் ஸ்ட்ரைக் ரேட். இரட்டைச் சதத்துக்கு நிச்சயம் கூடுதலாக 50-60 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டுள்ளார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா இறங்கி 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 603 ரன்களுக்கு இந்தியா 210 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஓவருக்கு 2.87 ரன்கள்தான், ஆனால் மிக முக்கியமான, தொடரை முடிவு செய்யும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மிகவும் உழைத்து வீசி 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஓகீப் 77 ஓவர்களில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், சிக்கனமாக வீசினார். நேதன் லயன் 46 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 163 ரன்களுக்கு 1 விக்கெட்.

புஜாராவின் சாதனை:

இந்திய வீரர்களிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிகபந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமையை எட்டினார் புஜாரா, அவர் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 525 பந்துகளை சந்தித்தார். இதுதான் ஒரு இந்திய வீரர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச பந்துகளைச் சந்தித்தத நிகழ்வாகும்.

இவருக்கு அடுத்த படியாக ராகுல் திராவிட் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 270 ரன்களை எடுத்த போது 495 பந்துகளை சந்தித்திருந்தார், இது தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 491 பந்துகளை எதிர்கொண்டு நவ்ஜோத் சித்து (201) 3-ம் இடத்திலும் 477 பந்துகளை எதிர்கொண்டு ரவிசாஸ்திரி (206) 4-ம் இடத்திலும் 472 பந்துகளை எதிர்கொண்டு சுனில் கவாஸ்கர் (172) 5-ம் இடத்திலும் உள்ளனர்.

152 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸை ஆடியது. வார்னர் விக்கெட்டை ஜடேஜா பவுல்டு முறையில் வீழ்த்தினார், ஆப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பிய பந்து வார்னர் தடுப்பைக் கடந்து ஆப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. இரவுக்காவலனாக நேதன் லயன் இறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று திரும்ப, மட்டையைக் கடந்து சென்ற பந்து ஸ்டம்பைத் தாக்கியது.

முன்னதாக டி.ஆர்.எஸ். உதவியினால் தப்பி ஆஸி. பந்து வீச்சை வறுத்தெடுத்த புஜாரா, சஹா!

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா, சஹாவின் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.இருவரும் அபாரமாக ஆடி 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்துள்ளனர். தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்