உ.பி. யின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
modi 2017 3 5

  லக்னோ  - ‘‘உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் (44) நேற்றுமுன்தினம் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பாகிஸ்தான் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் யோகி ஆதித்தியநாத் பல்வேறு சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேலும், இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்பவர். அவர் உ.பி. முதல்வராக பதவியேற்றதால் அரசியல் கட்சியினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதற்கிடையில், பதவியேற்பு விழா முடிந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
திறமையுள்ள இந்தியாவை உருவாக்க..

தற்போது ஒரே குறிக்கோள், இலக்கு எல்லாம் உத்தரபிரேதச மாநில வளர்ச்சிதான். இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சிறந்த திறமையுள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்களது அயராத முயற்சி தொடரும். புதிய சாதனைகளை படைக்கும் அளவுக்கு மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உத்தரபிரதேசத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு பாடுபடும்.

இந்த வெற்றிக்குப் பாடுபட்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத், கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். உ.பி.யின் வளர்ச்சிக்காக சேவையாற்ற வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். உத்தரபிரதேச இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு சேவை செய்யவே பாஜக விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார். முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்தியநாத் 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்தவர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: