பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் தேதிகள்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
Plus- 2 exam k a Sengottaiyan

சென்னை : பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம், ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக, அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 2016-17ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்ய உள்ள மாணவர்களுக்கு மேற்படிப்பு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பயிற்சியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் இடைநிற்றல் இல்லாத உயர்படிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், வேலைவாய்ப்புக்கான பல்வேறு துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வழிகாட்டும் வகையிலும் வாய்ப்புகளைப் பெற மாணாக்கர்கள் தம்மை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கும் வகையிலுமான கருத்துகளை உள்ளடக்கிய, இப்பயிற்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி, சென்னை, நுங்கம்பாக்கம், டிபிஐ வளாகம், கருத்தரங்கக் கூடத்தில், நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள். மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்து வல்லுநர்கள் பங்கேற்பாளர்களுக்குப் பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளில் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து ஒன்றியங்களில் ஏப்ரல் 7-ம் தேதியும், மாணவர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்: