முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் : பிரதமர் மோடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டன
உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்து, முடிவுகள் வெளியான பின்னர் நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது, அமைச்சர்களை தேர்வு செய்வது, பதவி ஏற்பு விழா போன்றவற்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் மும்முரமாக மூழ்கிப் போனதால் பாராளுமன்ற கூட்டத்தை நடத்த போதுமான (மூன்றில் இரு மடங்கு) பெரும்பான்மை (கோரம்) இல்லாததால் இரு அவைகளையும் ஒத்தி வைக்கும் நிலைமை சமீபத்தில் நேர்ந்தது.

அன்சாரி வேதனை
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதில் அளிப்பதற்கு துறைசார்ந்த மத்திய அமைச்சர்கள் அவையில் இல்லாமல் போனது தொடர்பாக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி உத்தரவு
இந்நிலையில், புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை
பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் தவறாமல் கலந்து கொள்வதன் மூலம் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையை சுட்டிக்காட்டி பேசிய அவர், உங்களில் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அழைத்து அவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கேட்பேன் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்