கட்சி சின்னம், பெயர் முடக்கம்: தேர்தல் கமி‌ஷனுக்கு நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி கண்டனம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      அரசியல்
Nanjil-Sampath 2017 03 23

சென்னை, அ.தி.மு.க கட்சி பெயரையும், சின்னத்தையும் முடக்கிய தேர்தல் கமி‌ஷனுக்கு சசிகலா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. அ.தி.மு.க. கட்சி பெயரையும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலையில் நிர்வாகிகள் குவிந்தனர். காலை 11 மணிக்கு டி.டி.வி தினகரன் தலைமை கழகத்துக்கு வந்தார்.பின்னர் அவர் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே அ.தி.மு.க கட்சி பெயரையும், சின்னத்தையும் முடக்கிய தேர்தல் கமி‌ஷனுக்கு சசிகலா அணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைமை கழகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் பலம் பொருந்திய கட்சியான அ.தி.மு.க.வும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது கடும் அதிர்ச்சியாக உள்ளது. இதை கருப்பு நாளாக கருதுகிறேன்.இது ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சி மீதும் நடத்தப்பட்ட கொரில்லா தாக்குதல் ஆகும். சரித்திர அநியாயம். துரோக கூட்டத்தில் இருப்பவர்கள் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் மிகவும் குறைவு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் அமோக வெற்றி பெறுவார். தொப்பி சின்னத்தில் போட்டியிடும் அவர் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம்.‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர் தொப்பி அணிந்து வந்து மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த சின்னத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றிபெறுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா அணியை சேர்ந்த நடிகை சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது:-

எங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனை நிரந்தரம் அல்ல. 95 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருந்த போதிலும் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருப்பது வேதனை தருகிறது. இதற்காக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.உத்தரப்பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியில் மோதல் ஏற்பட்ட போது மெஜாரிட்டி நிர்வாகிகளின் ஆதரவை பெற்ற அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதே போல் இரட்டைஇலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? எங்களுக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக சோதனைதான். அதில் இருந்து மீண்டு வருவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி தினகரன் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: