முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் வியாபம் ஊழல்: முதல்வர் சிவராஜ் சிங் செளகானை பதவியில் இருந்து நீக்க காங்.கோரிக்கை

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

போபால், மாநிலத்தில் வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில கூறப்பட்டுள்ளதற்கு பொறுப்பேற்று முதல்வர் பொறுப்பில் இருந்து சிவராஜ் சிங் செளகானை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு உள்ளது. முதல்வராக சிவராஜ் சிங் செளகான் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் வியாபம் என்ற இந்தி சொல் பெயரில் தொழில்நுட்ப தேர்வு வாரியத்தில் பணிநியமனம் செய்தது ஆகியவற்றில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு மாநிலத்தையே உலுக்கி எடுத்தது. இதுகுறித்து மத்திய தணிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வியாபம் ஊழல் குறித்து கூறியுள்ளது. அதில் மாநில அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு கடிதம்:

அதனால் முதல்வர் பதவியில் இருந்து செளகானை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மத்தியப்பிரதேச மாநில சட்டசபை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்  அஜய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். செளகான் பதவிக்காலத்தில்தான் வியாபம் ஊழல் நடந்துள்ளது. அதனால் செளகானை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக அஜய் சிங் நேற்று போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

 ஊழலில் திளைத்துப்போன மாநிலதொழில்நுட்ப தேர்வு வாரியத்திற்கு இயக்குனர் மற்றும் கண்ட்ரோலர் நியமனம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் அடியோடு மீறப்பட்டுள்ளது என்று காக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களில் 53 பேர் இறந்துவிட்டனர். 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. உள்பட பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளால் ஏறக்குறைய 2 ஆயிரத்து 500 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. பெருமளவில் ஊழியர்கள் நியமனம் மற்றும்  அட்மிஷன் கொடுக்கப்பட்டதில்  நடந்த முறைகேட்டில் 2 ஆயிரத்து 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவைகள் அனைத்தும் செளகான் பதவிக்காலத்தில்தான் நடந்துள்ளது. இந்த ஊழல் நடந்தபோது மாநில மருத்துவக்கல்வி பொறுப்பாளராக செளகான் இருந்தார். வியாபம் மூலம் ஆயிரத்து 378 பேர் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்று செளகானே ஒப்புக்கொண்டுள்ளார். ஊழல் குறித்து விசாரணை நடத்திய புலனாய்வு ஏஜன்சிகள் முதல்வர் செளகானை அழைத்து விசாரணை நடத்தவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மென்மையான போக்கு:

நிலக்கரி சுரங்க ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து விசாரணை நடத்தும்போது வியாபம் ஊழலில் செளகானை  அழைத்து விசாரணை நடத்த முடியாதா?  இதற்கு முன்னர் இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத உமாபாரதி மற்றும் பாபுலால் கவுர் ஆகியோர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான  செளகான் ஏன் நீக்கப்படவில்லை. அவர் மீது கட்சி மேலிடம்  இரக்கம் காட்டுகிறதா அல்லது மென்மையான போக்கை  காட்டுகிறதா என்றும் அஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்