முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தும் பொது விநியோகத் திட்டத்தை மேலும் செம்மைபடுத்தும் நோக்கில் 330 கோடி ரூபாய் செலவில் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். அதன்பேரில் ஈரோடு மாவட்டம், சித்தோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை மேலும் செம்மைபடுத்தும் நோக்கில் ரூ.330 கோடி செலவில் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளது. அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் 6.70 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளது. இவற்றில் 50,000 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வரப்பெற்றதில் இம்மாவட்டத்தில் 1,132 நியாயவிலைக்கடைகளில் ஈரோடு வட்டத்திற்கு உட்பட 194 நியாயவிலைக்கடைகளில் முதற்கட்டமாக 27,258 மின்னணு குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வரப்பெற்றதும் படிப்படியாக வழங்கப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டமான இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு சிறப்பான முறையில் மென்பொருள் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அவரவர்களின் இல்லத்தில் இருந்தே இணைத்தளவழி சேவை மூலம் மின்னணு குடும்ப அட்டையில் தேவையான திருத்தங்களை செய்து அதன்பின்னர் இ-சேவை மையத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பொருட்டு, விற்பனை முனைய இயந்திரங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதிய தரவு தொகுப்பு (நேற னுயவய டீயளந) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 5 கோடியே 85 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளில் 1 கோடியே 17 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முழுமையான ஆதார் விவரங்களும், 70 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆதார் எண் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்த குடும்ப அட்டைகளில், 99 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் விவரங்களாவது சேகரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அறியும் வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசி எண்களும் சேகரிக்கப்பட்டு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட விவரத்தினை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அவர்களின் கைபேசிக்கு அனுப்பப்படுவதன் மூலம் போலிப் பட்டியலிடுதல் தவிர்க்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால், நியாய விலைக் கடைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீடுகள் இணையவழி மூலம் மேற்கொள்ளவும், கிடங்குகள் முதல் நியாயவிலைக் கடைகள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் நகர்வினை உடனுக்குடன் கண்காணிக்கவும் இயலும். மேலும் ஒரு நபர், ஒன்றிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் அவரின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கப்படுவதால், போலி குடும்ப அட்டைகள் மற்றும் போலி பட்டியலிடுதல் போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

                இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் டி.சுப்பிரமணியன், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் மோசஸ், வட்ட வழங்கல் அலுவலர் சு.கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்