கடலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி: அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      கடலூர்
cuddalure minister sampath issue smart card 2017 04 02

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் அரங்கில் 42 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். தொழில்துறை அமைச்சர் மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசியதாவது,

 

தமிழக முதலமைச்சர் அவர்களால் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி 01.04.2017 அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடலூர் வட்டத்திற்கு அச்சிட்டு வரப்பெற்ற 20,536 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி இன்று துவக்கி வைக்கப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் படிப்படியாக மின்னணு குடும்ப அட்டைகள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை மூலமாக வழங்கப்படும்.கடலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கை 1416, நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 6,68,946, நடைமுறையில் உள்ள குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 25,70,725, நடைமுறையில் உள்ள குடும்ப அட்டையில் ஆதார் பதிவு செய்த நபர்களின் எண்ணிக்கை 20,96,790. கிட்டதட்ட இன்னும் 5 இலட்சம் நபர்கள் குடும்ப அட்டையில் ஆதார் பதிவு செய்யாமல் உள்ளார்கள். அவர்களும் ஆதார் எண்ணை குடும்ப அட்டையில் பதிவு செய்யவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை தமிழக அரசின் சார்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு வைக்க கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த மின்னணு குடும்ப அட்டை இருந்தால்தான் வருங்காலங்களில் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை பதிவு செய்தவர்கள் 82 சதவிகிதம். 100 சதவிகிதம் பதிவு செய்யவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்க கடமைப்பட்டுள்ளேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக மற்றும் பகுதியாக ஆதார் அடையாள அட்டை பதிவு செய்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் மின்னணு குடும்ப அட்டையானது முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு வகையிலான அட்டைகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டது போல் தொடர்ந்து விலையில்லா அரிசி வழங்கப்படும். இது குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். முன்னுரிமை குடும்ப அட்டையை பொருத்தவரை குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களில் மூத்தவரை குடும்பத் தலைவராகக் கொண்டு புகைப்படம் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது விநியோகிக்கப்படும் மின்னணு குடும்ப அட்டை தமிழக அரசால் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தங்கள் முதலான சேவைகள் அரசு பொது சேவை மையங்களின் மூலமாகவோ, கணினி மூலமாகவோ திருத்தம் செய்து கொண்டு பயன்பெறத்தக்க வகையில் அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்து மேற்கண்ட திருத்தங்களை செய்துகொள்ளலாம்.மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு மாவட்டத்திற்கு வரப்பெற்றதும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களால் நியாயவிலைக்கடையில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு இரகசிய குறியீட்டு எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால் தவறான நபர்கள் குடும்ப அட்டை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது நியாயவிலைக்கடைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதையும், தாங்கள் வாங்கிய பொருட்கள் என்னென்ன என்பதையும் குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டை கிடைக்கும் வரை பழைய குடும்ப அட்டையின் மூலம் நியாய விலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்இதுவரை நியாய விலைக்கடையில் ஆதார் அடையாள அட்டை மற்றும் கைபேசி எண்களை பதிவு செய்யாதவர்கள் உடடினயாக பதிவு செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசால் தற்போது ஒரு நபருக்கும் 5 கிலோ அரிசி வீதம் 8 நபர்கள் இருப்பின் 40 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது மேற்படி 40 கிலோ அரிசியில் 5 கிலோ விலையில்லா கோதுமை மற்றும் 35 கிலோ விலையில்லா அரிசியாக வழங்கப்படுகிறது.எனவே, கடலூர் மாவட்ட மக்கள் அனைவரும் மின்னணு குடும்ப அட்டையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தங்கவேலு, வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, துணைப்பதிவாளர் சங்கர், இணைப்பதிவாளர் (பொ) ஆ.கே. சந்திரசேகரன், மண்டல மேலாளர் பூவேந்திரன், கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன், கடலூர் தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள்) கலாவதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.குமரன், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் ஜி.ஜே.குமார், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: