முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10,12ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு சார்ந்த ஆலோசனைக் கருத்தரங்கம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      கடலூர்
Image Unavailable

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2016-17 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, மாணவர்களின் இடைநிற்றல் இல்லாத உயர்படிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், வேலைவாய்ப்பு அமைந்துள்ள துறைகளை மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் வாய்ப்புகளை பெற மாணவர்கள் தம்மை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை உள்ளடக்கி இப்பயிற்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கத்தினை இன்று (06.04.2017) கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 10 மற்றும் 12ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கருத்தரங்கினை தொடங்கி வைத்து மாணவர்களிடையே தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 14 வகையான திட்டங்களின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆலோசனைகளை வழங்க பல்வேறு நிறுவனங்கள் அதிகமான அளவு பணத்தினை பெற்று ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. ஆனால் இந்த கருத்தரங்கில் இலவசமாக அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனை மாணவ மாணவியர் அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். படிப்போடு நின்றுவிடாமல் நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டு கடினமாக உழைக்கவேண்டும். திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ளவேண்டும். படிக்கும் வாய்ப்பு ஒருமுறைதான் நமது வாழ்வில் கிடைக்கும் எனவே, அந்த வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கைக்கான அடித்தளத்தை உருவாக்கவேண்டும். வாழ்கையில் முன்னேறுவதற்கான படிக்கற்களை தெரிந்துகொள்ளவேண்டும். புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு, புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். மொழிப்பாடங்களை நன்றாக கற்றுக்கொண்டு பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பின் விடா முயற்சியுடன் வேலை செய்துகொண்டே படிக்க முயற்சி செய்யவேண்டும்.நமது நாடு மின்னணுமயமாக மாறி வருவதால் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பினை பெற முயற்சிக்கவேண்டும். எனவே, மாணவ மாணவியர்கள் அனைவரும் இந்த கருத்தரங்கை நன்கு பயன்படுத்தி தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கடுமையாக உழைத்து தங்களது வாழ்க்கையை உயர்த்திக்கொண்டும், கடலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்லவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி வரவேற்பு மற்றும் விளக்கவுரையாற்றினார். கிருஷ்ணசாமி கல்விக்குழும நிறுவனத்தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன் முன்னிலையுரையாற்றினார். அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டி.சண்முகவடிவேல், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஆயிஷா நடராஜன், தலைமையாசிரியர் ஜி.தனசேகரன், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் என்.முரளிதரன், மருத்துவ, பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, பாரா மெடிக்கல் கல்வி நிறுவனம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்