முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப்புடன் ஜின்பிங் முதன்முறையாக சந்திப்பு

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வாஷிங்டன் நகரில் சீன அதிபர் க்சி ஜின்பிங் சந்தித்ததன் விளைவாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த 100 நாள் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணம்
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர் உலக நாடுகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.  அவ்வகையில் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள சீன அதிபர் க்சி ஜின்பிங் புளோரிடா மாநிலத்தில் உள்ள மார்-அ-லாகோ சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் முதன்முதலாக டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு - பொருளாதாரம்
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சந்திப்பின்போது, இருநாடுகளின் அமைச்சகங்களுக்கு இடையிலான தொடர் பரிவர்த்தனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பணியாற்றிவரும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து நீடித்துவரும் மந்தநிலை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை
ராஜதந்திர அணுகுமுறை மற்றும் பாதுகாப்பு, இருதரப்பு பொருளாதார வளர்ச்சி, சட்டம், விதிகள் அமலாக்கம் மற்றும் சைபர் குற்றம் தொடர்பான விவகாரங்கள், சீனா-அமெரிக்கா இடையிலான சமூக - கலாச்சார பரிவர்த்தனை தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் நேற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அர்த்தமுள்ள முன்னேற்றம் எட்டப்படும் என்றும் வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

100 நாள் செயல்திட்டம்
இந்த முன்னேற்றத்தின் முதல்கட்டமாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த 100 நாள் செயல் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. சீன அதிபருடன் வந்துள்ள அவரது மனைவியும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவியும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் ஒன்றாக உணவருந்தி மகிழவும் இந்த சந்திப்பு வழிவகுத்துள்ளது என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைஸர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்