முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் பல்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி எல்க்ஹில் முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

                      சுமார் 7000 அடி உயரம்            

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து முருகன் திருக்கோவில்களிலும் நேற்று பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஊட்டியில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 7,000 அடி உயரத்தில் இயற்கை அன்னையின் கருணையினால் எழிலுடன் இலங்கும் திருமான் குன்றம் என வழங்கும் எல்க்ஹில் மலை மீது திருக்கோயில் கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியன வேண்டியாங்கு வழங்கி அருளாட்சி செய்து வரும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தேர்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

                                               முருகப்பெருமான்

அதனையொட்டி காலை 5.30 மணிக்கு மஹா கணபதி ஹேமம், 108 கலச பூஜைகள், சத்ரு சம்ஹார ஸ்ரீசண்முக சுப்ரமண்ய சடாஷார மாலா மந்திர திரிசத் ஹோமம், பூர்ணாகுதி நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது தீபாராதனை நடத்தப்பட்டது. பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். டிராக்டர் மூலம் இழுத்து வரப்பட்ட திருத்தேரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் சென்று மாலையில் மீண்டும் திருக்கோயிலை சென்றடைந்தது.

                                பால்குடம், காவடி 

பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி சோழிய வேளாளர் இளைஞர் சங்கத்தின் சார்பில் முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து 200_க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி  தாங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முருகனுக்கு பாலாபிஷேம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் சோழிய வேளாளர் இளைஞர் சங்கத்தினர் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், திருக்கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்தம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

இதேபோன்று போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோவில்களிலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்