
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வடிவமைப்பு அமெரிக்காவின் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு போர் விமானத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜீப் எஸ்யூவிகளுக்கே உரித்தான க்ரில் அமைப்பு, நேர்த்தியான க்ரில் அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சியான டெயில் லைட் க்ளஸ்ட்டர் போன்றவை இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மிக கவர்ச்சியாக காட்டுகின்றன. அதேநேரத்தில், ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்ய முடியும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் மாடலில் பனித் தரை, மணல் மற்றும் சேறு நிறைந்த பகுதி மற்றும் கரடுமுரடான மலைச்சாலைகளில் இயக்குவதற்கான செலக்ட்- டெர்ரெய்ன் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த எஸ்யூவியில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், மோசமான சாலைகளை எதிர்கொள்வதற்கு ஏதுவான ஃப்ரிக்யூவன்சி செலக்ட்டிவ் டேம்பிங் மற்றும் மூடி இல்லாத பெட்ரோல் டேங்க் போன்ற பல முத்தாய்ப்பான அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது.புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 50 பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.ஜீப் காம்பஸ் எஸ்யூவி புனே அருகே ரஞ்சன்கவுனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்காக 280 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.வலதுபக்க ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உற்பத்தி கேந்திரமாக இந்தியா விளங்கும்.