முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 17-வது லீக் ஆட்டம்: புனேயிடமும் வீழ்ந்தது பெங்களூரு அணி

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு :  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 17-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி புனே அணியிடமும் தோல்வியை தழுவியது.

கெய்ல் நீக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 17-வது லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல், டைமல் மில்ஸ் கழற்றி விடப்பட்டு அந்த இடத்திற்கு ஷேன் வாட்சன், ஆடம் மில்னே அழைக்கப்பட்டனர். புனே அணியில் லோக்கி பெர்குசன், அங்கித் ‌ஷர்மா ஆகியோருக்கு பதிலாக டேனியல் கிறிஸ்டியன், ஜெய்தேவ் உனட்கட் இடம் பிடித்தனர்.

தலைகீழானது

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராகுல் திரிபாதியும், ரஹானேவும் புனே அணியின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியில் அமர்க்களப்படுத்திய இவர்கள் முதல் 5 ஓவர்களில் 50 ரன்களை திரட்டினர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் அப்படியே தலைகீழானது. ரஹானே 30 ரன்களிலும் (25 பந்து, 5 பவுண்டரி), திரிபாதி 31 ரன்களிலும் (23 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

டோனி 28 ரன்கள்

இதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், டோனியும் ஜோடி சேர்ந்து ஆடினர். ‘மலைப்பான கூட்டணி’ என்ற போதிலும், அதன் தாக்கத்தை ரன்வேட்டையில் பார்க்க முடியவில்லை. ஸ்கோர் சீராகத்தான் நகர்ந்தது. டோனியை பொறுத்தவரை ஒரு இமாலய சிக்சர் அடித்து பிரமாதப்படுத்தினார்.  அணியின் ஸ்கோர் 127 ரன்களாக (16 ஓவர்) உயர்ந்த போது டோனி (28 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வாட்சனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டீவன் சுமித்தும் (27 ரன், 24 பந்து, 3 பவுண்டரி) ஸ்டம்பை பறிகொடுத்தார். டேனியல் கிறிஸ்டியன் (1 ரன்), பென் ஸ்டோக்ஸ் (2 ரன்), ‌ஷர்துல் தாகுர் (0) வந்த வேகத்தில் வெளியேறினர். 3 ரன் இடைவெளியில் 5 விக்கெட் சரிந்ததால் புனே அணி தவிப்புக்குள்ளானது.

161 ரன்கள்

அதிர்ஷ்டவசமாக கடைசி கட்டத்தில் மனோஜ் திவாரி கைகொடுத்தார். வாட்சனின் 19-வது ஓவரில் அவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். இதனால் ஒரு வழியாக புனே அணி 150 ரன்களை கடந்தது. கடைசி பந்தில் ரன்–அவுட் ஆன மனோஜ் திவாரி 27 ரன்கள் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 20 ஓவர் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

புனே வெற்றி

அடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி 2–வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 29 ரன்களும், கேப்டன் விராட் கோலி 28 ரன்களும் எடுத்தனர். புனே தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ‌ஷர்துல் தாகுர் தலா 3 விக்கெட்டுகளும், உனட்கட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 5–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூருக்கு விழுந்த 4–வது அடி இதுவாகும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன புனே அணி முதலில் பேட் செய்து வெற்றியை பெறுவது இதுவே முதல்முறையாகும்.

டோனியின் இமாலய சிக்ஸ் ...

இந்த தொடரில் முந்தைய ஆட்டங்களில் சொதப்பி வந்த மகேந்திர சிங் டோனி, பெங்களூருக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 14-வது ஓவரில் சாகல் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் ஒன்றை விளாசினார். டோனி விளாசிய அந்த பந்து மைதானத்தின் கூரைக்கு மேலே சிக்கிக் கொண்டது. இந்த சீசனில் விளாசப்பட்ட பெரிய சிக்ஸர் இது என்று தெரிகிறது.

24 ஆயிரம் ரன்கள்

மேலும் டோனி 23 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 24 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். இந்தப் போட்டில் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு டிவில்லியர்சின் விக்கெட்டை கைப்பற்றினார். இம்ராம் தாஹிர் வீசிய அற்புதமான பந்தை வெளியே இறங்கி அடிக்க முற்பட்ட டிவில்லியர்சை தாண்டி பந்து பின்னே சென்றுவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் டோனி அதனை பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்