முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரமற்ற உணவு அளித்ததாக புகார் கூறிய ராணுவ வீரர் பணியிலிருந்து நீக்கம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக சமூகவலைத்தளத்தில் பரபரப்பு புகார் எழுப்பிய எல்லைப் பாதுகாப்புப் படை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பொய்யான புகார்
கான்ஸ்டபிள் மட்டத்தில் உள்ள வீரரான தேஜ் பகதூர் யாதவ்வின் இந்தப் புகார் பொய்யானது என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் தேஜ் பகதூர் யாதவ் மீது இந்த பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பாராமிலிட்டரிப் படையில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேல்முறையீடு
“ஒழுக்க மீறல் மற்றும் விதிமீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக அவர் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், தேஜ் பகதூர் யாதவ், ராணுவ வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பணி நீக்கம்
அரசு ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினாலும் சட்ட விரோதமாக அவை வெளியில் விற்கப்படுவதால் கீழ்நிலையில் உள்ள ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது, இதில் அவர் கூறியது தவறான குற்றச்சாட்டுகள் என்று நிரூபணமானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர், இதனையடுத்து அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தேஜ் பகதூர் யாதவ் பிஎஸ்எப்-ல் ஜம்முகாஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே பணியிலமர்த்தப்பட்டிருந்தார். அங்கு தங்களுக்கு தண்ணீராக ஒரு சூப்பும், சுட்ட சப்பாத்தி மற்றும் தால் தரப்படுவதாகவும் அது தரமற்றதாக இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்