முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 22-வது லீக் ஆட்டம்: பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

இந்தூர்  - ஐ.பி.எல் 10-வது சீசனின் நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்ற 22-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

அம்லா சதம்
முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஹாசிம் அம்லா சதம் விளாசினார். தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.மார்ஷ் 26 (21), சாஹா 11 (15), மேக்ஸ்வெல் 40 (18) ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை தரப்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

படேல் - பட்லர்
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் - ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்களை குவித்திருந்த போது ஸ்டோனிஸ் பந்துவீச்சில் பார்த்திவ் படேல் 37 (18) கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, பட்லருடன் இணைந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

மும்பை வெற்றி
இந்நிலையில் ஆட்டத்தின் 13 ஓவரை மோகித் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த பட்லர் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 77 ரன்களை குவித்தார்.  இறுதியில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராணா 7 சிக்சர்களுடன் 62 (34) ரன்னும், பாண்டியா 15 (4) ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்