முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலுார் மாவட்டத்தில் வறட்சி, குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      கடலூர்
Image Unavailable

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  தலைமையில்  வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர்  வேளாண் உற்பத்தி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி,  மற்றும் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  ஆகியோர் முன்னிலையில் வறட்சி மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 ரூ.78 கோடி நிதி

இக்கூட்டத்தில்  தொழில்துறை அமைச்சர் , இந்த வறட்சி காலத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து, கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் அவர்களின் அறிவுரைக்கிணங்க தங்கு தடையின்றி நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கவேண்டும். கால்நடை தீவனம் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.78 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

116 பணிகள்

குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் 6.12 கோடி மதிப்பீட்டில் 116 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடலூர் மாவட்டத்தில் 10 ஏரிகளில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017ம் ஆண்டில் குடிமராமத்து பணிக்காக விருத்தாச்சலம் வெள்ளாறு வடிநில கோட்டத்திற்கு ரூ.9 கோடியும், சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்திற்கு ரூ.16 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர்  வேளாண் உற்பத்தி ஆணையர் , அனைவருக்கும் குடிநீர் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மின் மோட்டார்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கவனிக்கவேண்டும். கிணறுகளை ஆழப்படுத்துதல், போர்வெல் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் செய்யவேண்டியது இருந்தால் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 வங்கி கணக்கில் நிவாரண தொகை

கடலூர் மாவட்டத்தில் 9 கால்நடை உலர் தீவன கிடங்குகள் உள்ளன. கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் மேலும் உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் கால்நடை தீவனம் வழங்க தமிழக அரசு ரூ.78 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் 3 நாட்களுக்குள் 1700 கோடி ரூபாய்க்குமேல் பாதிப்படைந்த விவசாயிகளின் வங்கி கணக்கில்  நேரடியாக செலுத்தப்பட்டது.

ரூ.140 கோடி ஒதுக்கீடு

கடலூர் மாவட்டத்தில் சில நேரம் வறட்சியும், சில நேரம் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு நீர்நிலைகளை தூர்வாருதல் வேண்டும். இதற்காக நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.140 கோடி நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.  இதனால் கடலூர் மாவட்டத்தில் வருங்காலங்களில் வறட்சியும், வெள்ளப்பெருக்கும் குறைய வாய்ப்புள்ளது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் இப்பணியை மிகவும் சிறப்பாக கவனமாக மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆர்.குமரன், நகர்மன்றத் துணைத்தலைவர் ஜி.ஜே.குமார், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்