முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

711 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      சென்னை
Image Unavailable

தமிழக அரசின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 711 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் மரு.வி.சரோஜா வழங்கினார்கள்.

கல்வி தகுதி

பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை சார்பில் இராயபுரம், எழும்பூர், துறைமுகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 641 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவியையும், 2564 கிராம் தங்கத்தினையும், சமூக நலத்துறையின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.5.60 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் .டி.ஜெயக்குமார் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் மரு.வி.சரோஜா இராயபுரம் மண்டலத்தில் வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஏழைப் பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்திடவும், ஏழைப் பெண்களின் இளம் வயது திருமணத்தை தவிர்த்திடவும் மட்டுமில்லாமல், சமுதாயத்தில் ஏழைப் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் சிறப்பு திட்டங்களில் ஒன்றான ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000/-ம் மற்றும் 4 கிராம் தங்கமும் மற்றும் பட்டம் / பட்டயம் வரை படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கமும் 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 641 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 2564 கிராம் தங்கத்தை வழங்கினார்கள். பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அரசின் உத்தரவின்படி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூகநலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.8000 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் 70 பயனாளிகளுக்கு ரூ.5.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைச்சர்கள் வழங்கினார்கள். ஆக மொத்தம் 711 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், சமூகநலத்துறை இயக்குநர் வே.அமுதவள்ளி,துணை ஆணையாளர் (சுகாதாரம்) எம்.விஜயலட்சுமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா, பெருநகர மருத்துவ அலுவலர் மரு.ஷீலா கோபிநாத், மண்டல அலுவலர் சிவசௌந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்