முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழ்நிலை?

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

போர்ட்பிளேர் : இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தமான் நிகோபர் பகுதியில் 3 நாட்களுக்கு முன்பே நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.

கடந்தாண்டு தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பருவமழை காலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி கர்நாடக மாநிலம் தண்ணீரை பெருக்கி வைத்துக்கொண்டு எங்கள் மாநிலத்திலும் கடும் வறட்சி என்று கூறி, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் நெல்விளைச்சல் கடுமையாக பாதித்தது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் மட்டுமல்லாது போதுமான அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்கூட்டியே அந்தமான் நிகோபர் தீவில் நேற்று தொடங்கிவிட்டது. அதாவது மே 17-ம் தேதிதான் வழக்கமாக தென்மேற்கு பருவமழை அந்த பகுதியில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு 3 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கிவிட்டது.

தென்மேற்கு பருவகாற்று வேகமாக வீசுவதாலும் மேகக்கூட்டங்கள் அதிகமாக வருவதால் மழையும் பெய்யத்தொடங்கியுள்ளது. வங்கக்கடலின் தென் கிழக்கு, அந்தமான் நிகோபர், அந்தமான் தெற்கு மற்றும் வடக்கு  ஆகியபகுதிகளிலும் மழை பெய்யத்தொடங்கிவிட்டது. தென்மேற்கு பருவகாற்று மேலும் வேகம் அடைந்து வீசும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் இது கேரள கடற்கரைக்கு செல்லுமா? என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். அப்படி தொடங்கிவிட்டால் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாகும். கடந்தாண்டு கேரளாவில் ஜூன் 5-ம் தேதி தொடங்கியது. ஆனால் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. அந்தாண்டு பருவமழை அளவை விட சற்று கூடுதலாகவே பெய்தது.

கேரளாவில் ஜூன் 1-ம் தேதியே அல்லது அதற்கு 2 நாட்கள் முன்போ அல்லது பின்னரோ தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு மைய ஏஜன்சி அதிகாரி மகேஷ் பாலவாத் தெரிவித்துள்ளார். அடுத்த 72 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை விரிவடையலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்