முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணைப்பு இயற்கையாக இருக்கவேண்டும் முதல்வருக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -           செயல்படாத அ.தி.மு.க.இணைப்புக்குழுவை உடனடியாக திரும்ப பெறவேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.
                    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.கே.தமிழரசன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம்,முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, ராமகிருஷ்ணன், அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் திருப்பாலை கோபி, வண்டியூர் முருகன், பன்னீர்செல்வம், மகளிரணி செயலாளர் சண்முகப்ரியா, இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, எஸ்.முனியாண்டி, முத்துக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், இணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், விஜயன், பூமா ராஜா, ஓம்.கே.சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
         இந்த கூட்ட முடிவிற்கு பின்னர் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
                  எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. என்ற இயக்கத்தை அவருக்கு பின்னால் அம்மா கடல் போல் வளர்த்து இன்றைக்கு சிறப்பாக அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்ந்தால் நாங்கள் ஏற்றுகொள்ள தயார் என்று இருக்கிறோம். ஆனால் அதையே அவர்கள் பலவீனமாக எடுத்துக்கொண்டு ஒ.பி.எஸ். பல விமர்சனங்களை சொல்லி வருகிறார். இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். உடனடியாக தேர்தல் வந்து விடும் என்றெல்லாம் சொல்கிறார். ஒரு எம்.பி. கூட எங்களை பார்த்து கூவத்தூர் பாய்ஸ் இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் இணைய வேண்டுமா ?. இதனையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொண்டு தலைமை நிலைய செயலாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கி வருகிறோம்.
              அ.தி.மு.க. என்ற இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் இணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதே போல் ஒ.பி.எஸ். தரப்பிலும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுக்கள் ஒரு முறை கூட சந்தித்து எதையும் பேசவில்லை. அதிகாரம் இல்லாத குழுவாகதான் இந்த குழு இருக்கிறது. இது பற்றி கட்சி நிர்வாகிகள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இன்றைக்கு கூட பிராமண பத்திரத்தில் நிர்வாகிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களும் இதுபற்றி  கேட்டு வருகிறார்கள்.
           எனவே அதிகாரம் இல்லாத இந்த இணைப்புகுழு இனி தேவையில்லை. இந்த குழுவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த குழு இருப்பதால் எதிர் அணியினர் செய்யும் விமர்சனங்களுக்கு எங்களால் பதில் கொடுக்க முடியவில்லை. அங்கிருந்து யார் வந்தாலும், எப்போது வந்தாலும், அ.தி.மு.க. என்ற இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். என்னை போன்ற மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலின் பேரில் தான் இந்த இணைப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழு செயல்படவே இல்லை. எங்கள் இயக்கம் தனித்தன்மையுடன் இருக்கிறது. மதுரை புறநகர் மாவட்டத்தை பொறுத்த அளவில் 13 ஒன்றிய செயலாளர்கள்,3 நகர செயலாளர்கள், 8 பேரூராட்சி செயலாளர்கள், 4 பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட 33 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக எங்களுடன் தான் இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் 100 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் வரத்தயாராக இருக்கிறார்கள்.
           சட்டசபையில் நாங்கள் மெஜாரிட்டையை நிருபித்து உள்ளோம். சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளோம். எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பலவீனமாக இல்லை.சட்ட சபையில் அ.தி.மு.க. கொறடாவின் அறிவிப்பை மீறி ஒ.பி.எஸ். அணியில் உள்ள 11 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டதால் அவர்களை அப்போதே கட்சி தாவல் தடை சட்டத்தின் படி எம்.எல்.ஏ.  பதவியை இழக்க செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. அவர்கள் எங்களது பக்கம் வந்து விடுவார்கள் என்று தான் பொறுமையாக இருக்கிறோம். இப்போது கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
              எனவே அம்மாவின் அரசு எந்த முடிவையும் தைரியமாக எடுக்கலாம். இணைப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்ட அதிகாரம் இல்லாத இணைப்புகுழுவை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்