முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும்: முதல்வர் பழனிச்சாமி அழைப்பு

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான பாதைக்கு வரவேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்..

மேட்டுப்பாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் 69–வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்புவிழா என ஐம்பெரும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை,சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஐம்பெரும் விழா நடந்தது.விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இணைந்து செயல்பட வேண்டும்:-

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ. திமுக உடைந்து விடும் என்று நினைத்தனர். உடைக்கவும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் கனவு பலிக்கவில்லை.ஒருசிலர் பிரிந்து சென்றார்கள்.தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான பாதைக்கு வரவேண்டும். ஜெயலலிதா இரவு பகல் பாராது சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். அதன் காரணமாகவே நான் இன்று முதலமைச்சராக பதவியில் இருக்கிறேன். வெளியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் உழைப்பால் பதவி பெற்றவர்கள். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

பகல் கனவு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கலைத்து விடலாம் என்றும், கட்சியை அழித்து விடலாம் என்றும் சிலர் கனவு கண்டார்கள். அது பகல் கனவாகவே போய் விட்டது. எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. அவர்களுக்கு வாரிசு என்று சொன்னால் இங்கே இருக்கிறவர்களும், தொண்டர்களும் தான்.
இங்கிருக்கின்ற எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவின் செல்வாக்கால் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். தேர்தல் காலத்தில் அவர் (ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஓ.கே.சின்னராஜ்) பல வாக்குறுதிகளை தந்திருப்பார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசோடு இணைந்து செயல்படவேண்டும்.

ரூ.224 கோடி

மேட்டுப்பாளையம் நகரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.224 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக நிலம் ஒதுக்கீடுக்காக ரூ.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகரில் ரூ.92 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அத்திக்கடவு –அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து நீங்கள் ஆதரவு தரவேண்டும். அமெரிக்காவில் என்ன கல்வி கிடைக்கிறதோ அதே தரமான கல்வி கிடைக்க ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வித்தரம் உயர எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். ஏழை எளிய மாணவர்கள் ரூ.14ஆயிரத்திற்கு கம்ப்யூட்டர் வாங்க முடியாத நிலையில் அந்த மாணவர்களுக்கு இலவசமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினி கொடுத்தார்.

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு:-

அ.திமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக்கு முடிவுகட்ட தான் அ. தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கினார். எம்ஜிஆர் 11 ஆண்டுகள்,6 முறை ஜெயலலிதா முதல்வராக இருந்து சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார்கள். இந்தியாவிலேயே சிறந்த முறையில் பணியாற்றியவர் என்ற பெருமை ஜெயலிதாவிற்கு உண்டு. எம்ஜிஆர் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை . எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் பயனடைய தங்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் தனது உடல் நலத்தையும் பாராமல் உழைத்து வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த அரசு செயல்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதைதொடர்ந்து விழாவில் 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.பின்னர் மாற்று கட்சியில் இருந்து அ தி.மு.க.வில் 1000 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதல்வர் வரவேற்றார். இதன் பின்னர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை முதல்வர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்