முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்திற்கு எதிராக நாகரீக உலகை ஒருங்கிணைப்பேன்: அதிபர் டிரம்ப் உறுதி

சனிக்கிழமை, 20 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,  தீவிரவாதத்திற்கு எதிராக நாகரீக உலகை ஒருங்கிணைப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின்பு சவூதி அரேபியா, இஸ்ரேல், வாடிகன், பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனையொட்டி அவர் புறப்படுவதற்கு முன்பு வானொலி மற்றும் வார வெப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் தீவிரவாதத்திற்கு எதிராக நாகரீக உலகை ஒருங்கிணைப்பேன் என்று உறுதி அளித்தார். உலகத்திலேயே பெரிய மதங்களை பின்பற்றிவரும் சவூதி அரேபியா, இஸ்ரேல், வாடிகன் ஆகிய நாடுகளுக்கு முதலில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன். இந்த பயணத்தின்போது அமெரிக்க மக்களின் கருத்தை மறைக்காமல் தெளிவாக எடுத்துரைப்பேன்.

அமெரிக்காவின் பழைய நட்புறவை புதுப்பிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை நான் சந்தித்து பேசுவேன். அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவேன். தீவிரவாதத்திற்கு எதிராக இந்த நாகரீக உலகை ஒருங்கிணைப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார். முதலில் முஸ்லீம்களின் இருதயமாக விளங்கும் சவூதி அரேபியாவுக்கு என் பயணத்தை மேற்கொள்வேன். அங்கு 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்துகொள்வேன். தீவிரவாதம் குறித்து பல நாடுகளின் தலைவர்கள் வருத்தமும் கவலையையும் தெரிவித்துள்ளனர். மதவாதம் வளர்ந்து வருவதற்கும் தீவிரவாதத்திற்கு ஈரான் நிதியுதவி செய்துவருவதற்கும் பல நாட்டு தலைவர்கள் பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். இது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

பல முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்து போரிட முன்வந்துள்ளனர். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாமும் விரைவாக இணைந்து செயல்பட வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் அமெரிக்காவால் தீர்வுகாண முடியாது. அதேசமயத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க உதவி கோரும் நாடுகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
சவூதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இஸ்ரேல் செல்வேன். அங்கு வரலாற்று சிறப்புமிக்க நகரான ஜெருசலம் சென்று அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனை சந்தித்து பேசுவேன். அப்போது இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே அமைதியும் முன்னேற்றமும் ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

இஸ்ரேல் நாடானது மிகவும் பழமையான நெருங்கிய கூட்டணி. ஆனால் சமீபகாலமாக கூட்டணி நாடான இஸ்ரேல் வேறுவிதமாக நடத்தப்பட்டு வருகிறது. மீண்டும் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை இருக்கும். ஜெருசலம் நகரில் இருக்கும்போது பாலஸ்தீன அதிபர் அப்பாஸை சந்தித்து பேசுவேன். அப்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதி ஏற்படுவது குறித்து விவாதிப்பேன். அதனையடுத்து வாடிகன் சென்று போப்பாண்டவர் ஜான்பிரான்சிஸை சந்தித்து பேசுவேன். உலக அமைதி, சுதந்திரம்,நீதி ஆகியவைகள் கிறிஸ்தவ மத போதனையால் ஏற்படுவது குறித்து பேசுவேன். மேலும் இத்தாலியில் நடைபெறும் நாட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதோடு நண்பர்கள் மற்றும் பிறநாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுவேன். மேலும் ஜி7 மாநாட்டிலும் கலந்துகொள்வேன் என்றும் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்