முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரே‌ஷனில் அடுத்த மாதம் முதல் பொருட்கள் வாங்க முடியாது - உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆதார் எண்கள் விபரத்தை இணைக்காவிட்டால் ரே‌ஷனில் அடுத்த மாதம் முதல் பொருட்கள் வாங்க முடியாது என்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘ஸ்மார்ட்’ கார்டு

அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆதார் எண்ணை கொண்டு தற்போது குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரே‌ஷன் முறை கேட்டை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் விபரங்கள்

ரே‌ஷன் கடைகளில் நேரிடையாகவும், ஆன்-லைன் மூலமும் கார்டுதாரர்களின் ஆதார் விபரம் பெறப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 1 கோடியே 35 லட்சம் கார்டுதாரர்கள் மட்டும் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களை வழங்கி இருக்கிறார்கள்.

நிறுத்த முடிவு

மீதம் உள்ள 53 லட்சம் கார்டுதாரர்கள் பாதி உறுப்பினர்களின் விபரங்களை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். 2 லட்சம் பேர் ஒருவரின் ஆதார் விபரத்தையும் வழங்கவில்லை.இதையடுத்து ஆதார் எண்கள் விபரத்தை இணைக்காத ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு அடுத்த மாதம் (ஜூன்) முதல் ரே‌ஷன் பொருட்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு உத்தரவு

இது குறித்து உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் ரே‌ஷன் கார்டில் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ இலவச அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. தற்போது ரே‌ஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்களில் சிலரது ஆதார் விபரம் தராவிட்டாலும் முழு அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு ஆதார் விபரங்களை வழங்கியோருக்கு மட்டுமே ரே‌ஷன் பொருட்களை வழங்கும்படி தெரிவித்து உள்ளது. இதனால் ஒரு கார்டில் ஆதார் விபரம் தந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்து இனி ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்படும். இதனை அடுத்த மாதம் (ஜூன்) முதல் செயல்படுத்த அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்