முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி 121-வது மலர்காட்சி நிறைவு பெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி மலர்காட்சியில் சிறந்த பூங்காவிற்கான ஆளுநர் சுழற்கோப்பை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கிடைத்தது.

நிறைவு விழா

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121_வது மலர்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இக்கண்காட்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற மலர்காட்சியின் நிறைவு நாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கி பேசியதாவது-
ஊட்டியில் நடைபெற்று வரும் 121_வது மலர்காட்சியில் இடம்பெற்றுள்ள மலர்கள் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்த பலவண்ண மலர்கள் ஈர்க்கின்றன.

இந்தியாவில் 4 உயிர்சூழல் மண்டலங்கள்

இந்தியாவில் உள்ள பலவகையான மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக உள்ளது. இயற்கையின் கொடையாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்குள்ள 24 சிகரங்களில் 2637 மீட்டர் உயரம் கொண்ட தொட்டபெட்டா சிகரம் உள்ளது. உலகில் உள்ள 34 பல்லுயிர் பெருக்க உயிர்சூழல் மண்டங்களில் 4 இந்தியாவில் உள்ளன. மக்கள் தொகை பெருக்கம், வனங்களை அழிப்பது, புவி வெப்பமயமாதல் ஆகியவை இயற்கையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இயற்கையை பாதுகாக் வேண்டிய தருணம் இது. மக்கள் இயற்கை குறித்து அறியும் வகையில் சென்னையில் உள்ள ராஜ்பவன் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இயற்கையை பாதுகாக்கும் வகையில் மர நடவு திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு மாணவர் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் மரம் நட வேண்டும். இவ்வாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

வறட்சி நிதி ரூ.2244 கோடி

விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமை தாங்கி பேசியதாவது-மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைத்ததை முதல்வர் எடப்பாடியார் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசு விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ.2244 கோடி வழங்கியுள்ளது. ரூ.100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அது தற்போது ரூ.300 கோடியாக விரிவு படுத்தப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

600 பரிசுக்கோப்பைகள்

மலர்கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் சிறந்த பூங்காவிற்கான ஆளுநர் கோப்பை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கும், சிறந்த மலருக்கான தமிழக முதல்வரின் தங்க கோப்பை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கும் என மொத்தம் 51 சுழற்கோப்பைகளும், போட்டிகளில் பங்கேற்றவர்களில் முதல்பரிசாக 270, இரண்டாம் பரிசாக 226, மூன்றாம் பரிசாக 36 என மொத்தம் 600 கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவிற்கு தோட்டக்கலை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் வரவேற்று பேசினார். வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நன்றி கூறினார். விழாவில் ஆளுநரின் துணைவியார் வினோதா ராவ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர் அர்ஜூணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வஸ்தவா, கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன், தோட்டக்கலை இணை இயக்குநர் மணி, துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்