முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அரசு மைய அச்சக கட்டிடம்-அண்ணா நினைவுப் பூங்கா - முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை அரசு மைய அச்சகத்திற்கு 21 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், அண்ணா நினைவுப் பூங்காவை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது , 

'' மறைந்த  முதல்வர் ஜெயலலிதா 14.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பில், 'சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அரசு மைய அச்சகத்தின் 84,000 சதுர அடிகள் கொண்ட பழமை வாய்ந்த சிவப்புக் கட்டிடமானது, 31.10.2013 அன்றுஏற்பட்ட தீ விபத்தில் அதில் இயங்கி வந்த இயந்திரங்களுடன் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துவிட்டதாலும், அரசு மைய அச்சகத்தில் பணிபுரியும் 754 பணியாளர்களும் சிரமமின்றி பாதுகாப்புடன் பணிபுரிய நிரந்தரமானக் கட்டிடம் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டும் புதிய நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்படும்' எனஅறிவித்தார்.

அதன்படி, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில், சென்னை அரசு மைய அச்சகத்திற்கு 21 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.

ஜெயலலிதா 14.5.2013 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பில், 'பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பளவிலான இடம் பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், இங்கு வரக்கூடிய லட்சக்கணக்கான மக்களை மகிழ்வூட்டும் வகையிலும், அந்த இடத்தினை மேம்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்படும்' என அறிவித்தார்.

அதன்படி, சென்னை,காமராஜர் சாலையில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பராமரிப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் 12,280 சதுரமீட்டர் பரப்பளவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவுப் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், சென்னை அரசு மைய அச்சகத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு புத்தகம் கட்டும் இயந்திர சேவையை முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்