முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடப்படும்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 1½ லட்சம் ஓட்டல்கள், 30 ஆயிரம் மருந்து கடைகள் இன்று அடைக்கப்படும்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்த மத்திய அரசு இறுதி முடிவு எடுத்து ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்த உள்ளது. ஜி.எஸ்.டி. வரி 4 அடுக்காக 5, 12, 18, 28 சதவீதம் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வணிகர்கள் இந்த வரி விதிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயரும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல ஓட்டல்கள் நடத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தென் மாநிலங்கள் முழுவதும் நாளை ஓட்டல்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:- இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் சிறிய ஓட்டல்களுக்கு தற்போது அரை சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை வரி உள்ளது. இதை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வசூலிப்பதில்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரி 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே போல் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக வரியை ஓட்டல் நடத்துபவர்களால் கட்ட முடியாது. வாடிக்கையாளர்களிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது. 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் வரியுடன் சேர்த்து 118 ரூபாய் பில் கட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் ஓட்டல்களுக்கு வந்து சாப்பிட யோசிப்பார்கள். எனவே மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று அடைக்கப்படும். ஓட்டல்களை புதன் கிழமை தான் திறப்போம். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் ஓட்டல்கள் மூடப்படுகிறது. ஜூன் 3-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய அரசு ஒரு கூட்டம் கூட்டி ஆலோசனை கேட்க உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் இந்தியா முழுவதும் ஓட்டல்களை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து