முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கலாம்: சென்னை வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தென்மேற்கு பருவமழை ஒரு நாள் முன்கூட்டியே இன்று தொடங்கிவிடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஏதாவது ஒரு ஆண்டில் மே மாதம் கடைசியில் தொடங்கும். ஒரு சில வருடங்களில் பருவமழை சரியான காலத்தில் தொடங்கிவிட்டாலும் போதுமான அளவுக்கு பெய்யாமல் போகலாம். கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி பருவமழை தொடங்கியது. கேரளத்திலும் தமிழகத்திலும் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு 19 நாட்கள் கழித்து கேரளத்தில் தென்மேற்கு பரவமழை தொடங்கினாலும் அதிக அளவு பெய்தது. ஆனால் அந்தாண்டு கோடை முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் கேரளாவில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவியது. கேரளாவில் நேற்றுவரை குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை பகுதியில் குடிநீர் பஞ்சம் இருந்தது.

இந்தநிலையில் இந்தாண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அறிகுறியாக கடந்த 15-ம் தேதியே அந்தமான் நிகோபர் கடல் பகுதியில் பருவமழை தொடங்கிவிட்டது. அங்கிருந்து வங்கக்கடலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரிவடைந்து கேரளாவை சென்றடையும். கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டால் அது இந்தியா முழுவதும் தொடங்கிவதற்கான அறிகுறியாகும்.

இந்தாண்டு கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி கேரளாவில் தொடங்கிவிட்டது. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசத்தொடங்கிவிட்டது. இன்று தென்மேற்குபருவமழை தொடங்கிவிடும் என்று உறுதியாக தெரிகிறது. தென்மேற்கு பருவமழை மூலம் கேரளம், தமிழகத்தில் கோவை, நீலகிரி மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும். கர்நாடக மாநிலத்திற்கும் தென்மேற்கு பருவமழை மூலம் அதிக அளவு மழை பெய்யும். குடகு பகுதியில் பலத்த மழை பெய்யும். இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரிக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பவானி சாகர், அமராவதி, அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும்.

தேக்கடி, வண்டிப்பெரியாறு மற்றும் ராஜபாளையத்தையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சியின் பின்பகுதியில் பெய்யும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.  அதேசமயத்தில் பருவமழை ஒரு நாளைக்கு முன்னதாக தொடங்கினாலும் அதன் அளவு எப்படி இருக்கும் என்று போகப்போகத்தான் தெரியும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யும் அளவானது வழக்கத்தைக்காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்படி இருந்தாலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை போக்க இந்த தென்மேற்கு பருவமழை ஓரளவு உதவும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து