முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் தயாராகும் மஜித் மஜிதியின் திரைப்படம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் தற்போது இயக்கிவரும் "பியாண்ட் த க்ளவுட்ஸ்" என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக் என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர்.

அதைத் தொடர்ந்து சில்ரன் ஆஃப் ஹெவன், த கலர் ஆஃப் பாரடைஸ், பாரன், த வில்லோ ட்ரீ, த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் அறிவார்ந்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்த படைப்பாளி. இவர் தற்போது பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற பெயரில் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் மஜித் மஜிதி. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் இந்த படம், தமிழிலும் தயாராகிறது. ஒரே சமயத்தில் மும்மொழி (தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம்) களில் தயாராகி வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

உலகளவில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதில் ஹிந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் கதையின் நாயகனாகவும், மாளவிகா மோகனன் என்ற மலையாள தேசத்து மங்கை கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான ஜி வி சாரதா நடிக்கிறார்.இந்த படம் தமிழில் தயாராகி வருவதற்கான விளக்கத்தை படக்குழு தெரிவிக்கும் போது, ‘இக்கதையில் மூன்று மொழிகள் இயல்பாகவே இடம்பெறுகிறது.

அதனால் மூன்று மொழிகளுக்கான மூல அடையாளங்களை நில மற்றும் ஏனைய பின்னணிகளுடன் அதன் பாரம்பரிய தன்மை மாறாமல் படமாக்கி வருகிறோம். ஏனைய திரைப்படங்களைப் போல் நடிகர்களை மட்டும் இடம் மாற்றி , வசனங்களை அந்தந்த மொழிக்கேற்றவாறு சாதாரணமுறையில் மொழிபெயர்ப்பு செய்து, பேச வைத்து படமாக்கவில்லை ’ என்று தெரிவித்துள்ளது.

இதனை படத்தை தயாரிக்கும் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டீ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனங்கள் உறுதி செய்திருக்கிறது. அவர்கள் இது குறித்து மேலும் தெரிவிக்கும் போது,‘ மஜித் மஜிதிக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன் அவருடைய படைப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் நடைமுறை வாழ்வில் யதார்த்தமாக இருப்பதை பிரதிபலிப்பவையே. அதே போல இந்த படத்தின் திரைக்கதையிலும் , உள்ளடக்கத்திலும் மூன்று மொழிகளுக்கான கூறுகள் உள்ளன.

அதனால் தான் இந்த மூன்று மொழிகளைச் சார்ந்த கலைஞர்களை அதன் மரபு மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு திரைக்கதையில் தமிழக நகரம் இடம்பெற்றிருந்தால், அவர் தமிழக நகரத்திற்கு வந்து தமிழ் பேசும் மக்களின் பின்னணியில் தான் அந்த காட்சியை படமாக்குகிறார்.

இதன் மூலம் தன்னுடைய படைப்பிற்கான நேர்மையை வழங்குவதில் தன்னிகரற்று திகழ்கிறார் மஜித் மஜிதி’ என்று பெருமிதத்துடன் சொல்கிறது.ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டி ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த"பியாண்ட் த க்ளவுட்ஸ்" அண்ணன் தங்கை இடையேயான உறவை மையப்படுத்திய கதையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து