கொசஸ்தலை துணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு: சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      தமிழகம்
cm palanisamy(N)

சென்னை, கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறான கொசா ஆற்றில், தடுப்பணை மற்றும் நீரை திசைதிருப்பும் பணிகளை உடனே நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் வழியாக பாலாறு, கொசஸ்தலை ஆறுகள் பாய்ந்தோடுகிறது. ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை ஆந்திரா கட்டி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டி வருகிறது. எனவே இதை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.,

அவசரக் கடிதம்


ஆந்திரா தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையிலான கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறான கொசா ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டம் கார்லெட் நாகர் மண்டல், நெவாவயல் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசின் நீர்ப்பாசனைத்துறை மேற்கொண்டிருப்பது குறித்த முக்கிய பிரச்சனையை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருவதற்காகவே இந்த அவசரக் கடிதத்தை எழுதுகிறேன்.

கடும் ஆட்சேபம்

ஆந்திர அரசு தமிழக அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையான முறையில் தடுப்பணைப் பணிகளை மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் மத்தியில் பெருத்த பதட்டத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆற்றின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வெளிகாரம் கண்மாயின்கீழ் உள்ள சுமார் 354.33 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பெரிதும் பாதிக்கப்படும். இதனால் தமிழக விவசாயிகள் துயருக்கு ஆளாவார்கள். பாதிக்கப்படுவார்கள்.  ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறது.

உத்தரவிட வேண்டும்

ஆந்திர முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறுகளில் வேறு எந்த தடுப்பணைகளையும் கட்டக்கூடாது என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அது விஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து