ஒட்டன்சத்திரத்தில் விக்டோரியா அரசி காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்;டன்சத்திரத்தில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில அரசி விக்டோரியா மஹாராணி காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வீரமலை தன் பழைய வீட்டை சுத்தம் செய்தபோது, தம் முன்னோர்கள் சேகரித்து வைத்திருந்த ஒரு பையில் செம்பு நாணயம் இருப்பதை கண்டறிந்தார். அவர் அளித்த தகவலின் படி, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வு மாணவி தி.கோமதி ஆகியோர் இந்த நாணயத்தை ஆய்வு செய்தனர். இந்த நாணயம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது. கி.பி.1862ஆம் ஆண்டு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. காலணா மதிப்பில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் விக்டோரியா அரசி என்ற பெயர் பொறிப்புடன், இடது பக்கம் உருவம் திரும்பிய நிலையிலும், நாணயத்ததின் மறுபுறம் கி.பி 1862 ஆம் ஆண்டு காலணா என்று ஆங்கிலத்திலும் பொறிப்பு காணப்படுகிறது. இந்த நாணயம் 6.200 கிராம் எடையுடன் 250 மி.மீ விட்டத்தில் செம்பு நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரியா விக்டோரியா என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கில அரசி 1819-ல் பிறந்து 1901-ல் மறைந்தவர். ஏறத்தாழ 63 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியாக இருந்தவர் 1857-ல் இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்திற்குப் பிறகு 02.08.1858-ல் ஆங்கில அரசு ஒரு சட்டத்தின் மூலம் கிழக்கு இந்திய கம்பெனி வசம் இருந்த ஆட்சி அதிகாரத்தை நேரடிய ஆங்கில அரசுக்கு மாற்றியது. அதுமுதல் விக்டோரியா அரசு இந்தியாவிற்கும் அரசியானார். அவர் ஆட்சி காலத்தில் இவ்வாறான செம்பு நாணயங்கள் இந்தியாவில் “அணா” மற்றும் ரூபாய் மதிப்பில் வெளியிடப்பெற்றன. அந்த நாணயங்களில் ஒன்று தான் தற்போது கிடைத்துள்ளது.
தன் வாழ்நாளில் ஒருமுறை கூட இவர் இந்தியா வந்ததில்லை. எனினும் இந்தியர்களின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு ஆசிரியரை வைத்து அவர் இந்தி மொழியையும், கற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் தன் அரசவையை இந்திய தர்பாருக்கு இணையாக மாற்றியது. புகழ் பெற்ற கோகினூர் வைரத்தை அணிந்திருந்தது போன்றவை இவரின் இந்தியா ஈடுபாட்டை காட்டியது.