கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் , முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரவம்பு, அன்னிகரை மற்றும் படந்தாலுமூடு ஆகிய இடங்களில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
கொசு ஒழிப்பு பணிகள்
கேரள மாநிலத்தில் தற்பொழுது டெங்கு காய்ச்சல்; அதிகமாக பரவி வருவதால், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியும், தமிழ்நாடு மாநிலத்தின் எல்லை பகுதியுமான கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊரவம்பு, அன்னிகரை மற்றும் படந்தாலுமூடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளான முஞ்சிறை மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 41 கிராமங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, கேரள மாநிலத்திற்கு சென்று வேலை செய்து, திரும்பும் நபர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேண்டுகோள்
மேலும், கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, கொசுபுழு ஒழிப்பு பணிகள் மற்றும் தேவைகேற்ப புகைமருந்து அடிக்கும் பணிகள் போன்ற பாதுகாப்பு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதலாக 575 தற்காலிக பணியாளர்கள் உள்ளாட்சித்துறை மூலமாகவும், சுகாதாரத் துறை மூலம் 90 நபர்கள் என மொத்தம் 665 நபர்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், கொல்லங்கோடு பேருராட்சி, ஆலூர் பேருராட்சி மற்றும் குளப்புறம் ஊராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று டயர்கள், தென்னைமட்டைகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், டெங்கு கொசு ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் (பொ)) மரு.எம்.மதுசூதனன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விநாயகசுப்பிரமணியன், மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் மரு.கிங்சால், வட்டார வளர்ச்சி அலுவலர் சுனில் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.