சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ....

செவ்வாய்க்கிழமை, 4 ஜூலை 2017      மாணவர் பூமி
China-school-class

 பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோயில். எனவே, சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஊக்கமுடைமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மையுடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகள் வாயிலாக நல்ல பெயர் பெறுங்கள். சொக்கத் தங்கத்தைக் காட்டிலும் நல்ல பெயர் பெறுவதே விலை மதிப்பற்றது.

உங்களையே நீங்கள் மதிக்கும் மனஉணர்வைப் பண்படுத்துங்கள். அதுபோன்றே நண்பர்களையும், அதிகாரிகளையும் மதித்து நடங்கள். மற்றவர்கள் நயநாகரிகமும் கனிவும் கலந்த பழகியல் பண்புடன் நடந்து கொள்வதையே மரியாதை என்கிறோம். அது தனி நபர் ஒருவரை இனிமை. கவர்ச்சி, இணக்கம், கனிவு, அமைதி கொண்டவராக அணி செய்கிறது.

உங்களது வெளி நடத்தை வாயிலாக இத்தகைய மதிப்புணர்வையும் காட்டுங்கள். அது பல நண்பர்களைப் பெற்றுத்தரும்: மென்மையினால் உங்களை அணி செய்யும்.

மென்மையான தொனியில் பேசுங்கள். இதனால், சீரிய பண்பாளராகவோ, பண்பட்ட மங்கையாகவோ உங்களையே பயிற்சிக் கொள்கிறீர்கள். குரலில் ஏற்ற இறக்கம், உச்சரிப்பிலே தெளிவு, சீரான தொனி, தெளிவான உச்சரிப்பு ஆகியவை மரியாதைக்குரிய மற்றும் பண்பட்ட மக்களின் அடையாளங்கள்.

மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டிய வேளைகளில் மௌனமாக இருங்கள். மௌனம் பொன் போன்றது: அரியவற்றைச் சாதிப்பதற்கு உதவுகிறது. ‘இடை யறாமல் உண்மையைத் தேடுவதில் ஈடுபட்டிருப்பவர் வாழ்க்கைக்கு மௌனம் இன்றி யமையாதது’ என்கிறார் காந்தியடிகள். நாவடக்கம் மகத்தான கலை; நாகாக்கக் கற்றுக்கொண்டு விட்டால் அது உங்கள் ஆணைப்படி நடக்கும் ; சிக்கல்கள் பலவற்றிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.

உங்களின் ஒவ்வொரு அசைவுகளிலும், பாவனைகளிலும் அமைதியும் அருளும் தவழட்டும். எப்போதும் எளிமையும், தன்னடக்கமும் உள்ளவராக இருங்கள். தாழ்வாரத்திலோ முற்றத்திலோ ஓடித் திரிதல் கூடாது. நோக்கமின்றிக் கண்டபடி சோம்பித் திரிவோர் போலத் திரியக் கூடாது. தக்க காரணத்துடன் சென்று வருதல் நன்று. கூச்சல் எழுப்பாதீர். நீங்கள் ஓடிக் குதித்து விளையாடவும், தாண்டித் தாவி ஆடவும் மேசைகள் செய்யப்படவில்லை. அவற்றின் மீது ‘தடதட’ எனத் தட்டுவதும் அழுக்காக்குவதும் செய்யத் தகாதவை!

தாழ்வாரத்தின் வழியாக நடந்து போகும் பொழுது, தக்க காரணம் இருந்தா லன்றி, ஒவ்வொரு வகுப்பறையினையும் முறைத்துப் பார்த்தவாறே செல்லுதல் கூடாது. மற்றவர்கள் செயல்களில் தலையிடத் தேவையில்லை. நாவடக்கத்தைப் போலவே கண்ணடக்கமும் முக்கியம்.

வகுப்புத் தொடங்கப் போவதற்கான அறிகுறியாக, முதல்மணி ஒலித்தவுடன், வகுப்பறைக்கு உள்ளே போய் உட்கார வேண்டும். ஆசிரியர் வருகிறவரை அமைதி யாக இருக்க வேண்டும். கதவருகே ஆசிரியர் வருவது தெரிந்ததும், மரியாதை காட்டும் முறையில் எழுந்து நிற்க வேண்டும். அவர் அமரும் வரையிலோ, உட்காருங்க! எனச் சொல்லும் வரையிலோ சிறிது நேரம் நின்றவாறு காத்திருத்தல் வேண்டும்.

காலம் தாழ்த்தாமல் வகுப்புக்குச் சென்று வருவது நல்ல பழக்கம். காலந் தாழ்த்தாமை போற்றுதலுக்குரிய செயல்முறை: மேலும் அது, காலம் குறித்த நமது அர்ப்பண ஈடுபாட்டு உணர்வைக் காட்டும்: அமைதி, நிம்மதி, சாந்தம், தன்னம் பிக்கை ஆகியன நம்மில் வளர உதவும். அதனைக் கண்டிப்பாகக் கடைபிடித்தோ மென்றால், மற்றவர்களின் மரியாதையைப் பெற்றுத் தருவதோடு நற்பண்பு நல வளர்ச்சிக்கு உதவும்.

காலதாமதமாக வர நேரிட்டுவிட்டால், வகுப்பறைக்கு நேராகச் சென்று, நுழைவாயிலருகே தொடை நடுங்கியவாறு நிற்கத் தேவையில்லை. பவ்வியமாக ஆசிரியரிடம் சென்று, தாமத அனுமதிச் சீட்டைக் கொடுத்து, தெளிவான அடக்கமான குரலில் ‘வணக்கம் ஐயா’ (அ) ‘வணக்கம் அம்மா’ (அ) ‘வணக்கம் ஃபாதர்’ (அ) ‘வணக்கம் சிஸ்டர்’ என பொருத்தமானதைக் குறிப்பிடுக. பின்னர் ‘ஐயா’ மன்னிக்க வேண்டும்: இன்று புகைவண்டி தாமதம் (அ) முன்கூட்டிப் புறப்பட்டு வரும் பேருந்தைத் தவறவிட்டு விட்டேன். இவை போன்ற உண்மைக் காரணங்களுள் ஒன்றினைக் கூறலாம். காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடாது.

வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் அல்லது கேள்விகேட்டு, ஐயம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், ‘ஐயா, அம்மா அருள்கூர்ந்து, இதை நான் தெரிந்து கொள்ளலாமா? ‘எனக்கு இதைப்பற்றி மீண்டும் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?’ போன்ற வினாக் களைப் பவ்வியமான சொற்கள் மூலம் கேட்கலாம்.

வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசக்கூடாது. பேசுவதற்குத் தவிர்க்க இயலாத தேவை ஏற்படுமென்றால், பக்கத்து மாணவர் காதில் கிசு கிசுக்கும் முறையிலோ அல்லது பாவனை மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆசிரியர் உங்களைக் கவனிக்காத நேரம் பார்த்து நெருப்புக் கோழி போலப் புத்தகத்திற்குள் தலையை இழுத்து மறைத்தவாறோ, கள்ளத்தனமாகவோ பேசுதல் கூடாது.

வகுப்பு முடிந்தவுடன், ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரையில், அமைதியாக உங்கள் இடத்திலேயே எழுந்து நின்று காத்திருங்கள். ஆசிரியர் முதலில் வெளியில் செல்லட்டும்: அவருக்கு முந்திச் சென்று வெளியேறு வதற்கு நெருக்கிப் பிடித்துப் போகவேண்டாம்.

பள்ளி அரங்கத்தினுள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளே நுழையும்பொழுதும், வெளியே போகும்பொழுதும் மேற்கூறியவாறு நடந்து கொள்வது நன்று. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முக்கிய பங்கேற்பாளர்கள் முதலில் வெளியே செல்லும் வரையில் காத்திருங்கள்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்கு, மெல்ல கைகளைத் தட்டித் தெரிவித்தால் போதும். முரசு முழக்குவது போலத் தாளகதியில் தட்டிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. மேசை மீது தட்டுவதும், தரைமீது காலடிகள் ஓசை எழுப்புவதும் செய்யக்கூடியது அல்ல. ஆரவாரமும் சண்டித்தனமும், செய்யாதீர்கள்.

ஆசிரியர் ஒருவர் தமிழ்மொழியில் கேட்கும்பொழுது தமிழிலேயே பதில் கூறுங்கள். ஆங்கிலத்தில் பதிலளிப்பது முறையல்ல. ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் தமிழில் பதிலளிக்காமல், ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்கள். முணுமுணுத்தவாறு பதில் சொல்லிக்கொண்டிருத்தல் கூடாது. தெளிவாகப் பேசு பவரே பண்பட்ட மனிதர்.

எந்தவொரு மொழியையும் புதிதாகப் பேசவோ, எழுதவோ, பயிலும்போது அம்மொழிச் சொற்களின் சரியான அசையழுத்தம், தொனி, உச்சரிப்பு முறை ஆகி யன அனைத்தையும் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பொது நல நோக்கில் சிறுவேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால், உதவ வேண்டும். சான்றாக, சன்னல்களைத் திறந்து வைத்தல், மேசைகளை வேறு இடம் கொண்டு செல்லல், வகுப்பறையைத் துப்புரவு செய்தல் முதலியன. பண்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் முந்திவந்து நின்று பணிசெய்து உதவி செய்வார்கள்.

பள்ளி, விடுதி, நூலகம் ஆகியவற்றின் நெறி முறைகள் அனைத்தையும் மதித்து நடங்கள்.

சுவர்களின் மீதோ, கரும்பலகை மீதோ கண்டதைக் கிறுக்காமல் தவிர்த்து விடுங்கள்.

கசக்கிய குப்பைக் காகிதங்களைத் தரைமீதோ, மண்மீதோ வீசி எறியக்கூடாது. மேசை மீதோ, தரைமீதோ மையைக் கொட்டுவதோ, போனா விலிருந்து உதறி உதிர்ப்பதோ கூடாது. உங்கள் வீட்டுக்குள் எவராவது அவ்வாறு செய்வதைக் காண நேர்ந்தால் கண்டிப்பீர்கள் அல்லவா?

வகுப்பிற்கோ, பள்ளிக்கோ புதிதாக வருபவர்களை, குறிப்பாகப் பெண்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல. அடக்கமற்ற அச்செயல் உங்களைத் தாழ்த்தும். ஒருவரிடம் நெருங்கிப் பேசும்பொழுது, அவர் வாயருகே நெருக்கமாகச் சென்று பேசாதீர்.

வாய்ச் சவடால் மொழிவதும் செய்யத்தகாத செயல்.

தேர்வுக்குக் குறித்த நேரத்தில் சென்று சேருங்கள்: புத்தகங்களை வகுப்ப றைக்கு வெளியே வையுங்கள்; மற்றவரைப் பார்த்தெழுத முயற்சி செய்வது நேர்மையற்றதும், ஒழுக்ககேடானதுமான செயலுமாகும். வினாத்தாளை வழங்கியதும் கவனமாகப் படியுங்கள். வினாவுக்கேற்ப நேரடி யான விடையை எழுதுங்கள்: நேர்த்தியாக எழுதுங்கள்: இடப்பக்கத்தில் வரைவுக் கோடு வரையுங்கள். இறுதி ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே தேர்வை முடியுங்கள். தாளின் பக்கவரிசை முறையைச் சரிபார்த்துக் கட்டுங்கள். பின்னர் எழுதிய விடை முழுவதையும் விரைவாகச் சரி பார்த்துத் தேவையான இடங்களில் செம்மையாக்கம் செய்யுங்கள்.

கூடுதல் தாள் எழுதுவதற்காக உங்களுக்குத் தேவையென்றால், எழுந்து நின்று காத்திருங்கள்! மேசை மீது தட்டி அழைப்பதும், இருமுவதும், செருமுவதும் ‘உஸ்’ என ஒலி எழுப்பி அழைப்பதும், கால்களைத் தரையில் தேய்த்து ஒலி எழுப்பிக் கவனத்தை ஈர்க்க முனைவதும் இடக்கையால் அலட்சியமாகத் தாளை வாங்குவதும் செய்யத்தகாத அநாகரிகச் செயல்கள்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து