முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களுக்குத் தனிக்கொடி கிடையாது: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  இந்திய அரசியலமைப்பு சட்டப்படி  மாநிலங்களுக்குத் தனியாகக் கொடி கிடையாது என்றும் மூவர்ண தேசியக் கொடி மட்டுமே இந்தியாவின் கொடி என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

காஷ்மீருக்கு தனிக்கொடி

இந்திய அரசமைப்பு சட்டம் 370-ன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்திற்கு என தனியாக கொடி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட அமைப்பினர் மஞ்சள் சிவப்பு வண்ண கொடியை மாநில கொடியாக பயன்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா உள்ளிட்ட கன்னட அமைப்பினர் மட்டுமே பயன்படுத்தி வந்த கொடி கடந்த பாஜக ஆட்சியின் போது அரசு விழாக்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டது. இதே நடைமுறையை தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசும் கடைப்பிடித்து வருகிறது.

கொடி அமைக்க குழு

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கன்னட அமைப்பினர் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு ஆதரவாக பேசிவரும் சித்தராமையா, கன்னடமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடியை உருவாக்கவும், அதனை வடிவமைக்கவும் 9 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்.

கர்நாடக அரசின் முதன்மை செயலர், கன்னட கலை மற்றும் வளர்ச்சி துறை செயலர், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு கன்னட கொடியை உருவாக்க தேவையான சட்டவிதிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு தற்போது அமலில் இருக்கும் மஞ்சள், சிவப்பு வண்ண கொடியை பிரகடனப்படுத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு மொழி சிறுபான்மையின அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம்  ஆகிய எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘மாநிலத்துக்கு என தனிக் கொடியை வைத்துக்கொள்ள இந்திய அரசமைப்பு சட்டம் அனுமதி மறுக்கிறதா? அதற்கு ஏதேனும் நிபந்தனைகள் உள்ளதா என ஆலோசித்து வருகிறோம். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலை மனதில் வைத்து தனிக்கொடி கோரிக்கையை நாங் கள் எழுப்பவில்லை.
இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக எதிர்ப்பு தெரிவித்தால் வெளிப்படையாக அறிவிக்கட்டும்’ என்றார். சித்த ராமையாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரே கொடிதான்: மத்திய அரசு விளக்கம்

 இந்த நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களுக்குத் தனியாகக் கொடி கிடையாது. மூவர்ண தேசியக் கொடி மட்டுமே இந்தியாவின் கொடி என மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர் கூறுகையில், ‘ஒரே நாடு. ஒரே கொடி என்ற கொள்கையைக் கடைபிடிக்கும் நாடு இந்தியா. மாநிலத்துக்கு என தனியாக கொடி வழங்குவதோ அல்லது வைத்துக்கொள்வதற்கோ சட்டத்தில் இடமில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து