முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

திருப்பூர், தமிழக அரசு சார்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டம்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டதன் பேரில் கடந்த மாதம் 20ம் தேதி மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டுவிழாவை துவக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து 2-வது விழாவாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடக்கிறது. 2 லட்சம் பேர் திரளும் இவ்விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகள்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூரில் இன்று நடக்கிறது. இதற்காக கரையாம்புதூரில் 11 ஏக்கர் பரப்பளவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு 60 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 81 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் அழகிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் நடராஜன், விஜயக்குமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேரில் பார்வையிட்டனர்.

பரிசுகளை வழங்குகிறார்

தற்போது, விழா ஏற்பாட்டு பணிகள் நிறைவடைந்தன. விழா இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. விழாவிற்கு சட்ட சபை சபா நாயகர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றுப்பேசுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்தை திறந்துவைத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டுகிறார்.

நலத்திட்ட உதவிகள் ...

விழாவில் 22 ஆயிரத்து 350 பயனாளிகளுக்கு ரூ.215 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.400 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும் பேசுகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்.முடிவில் மாவட்ட கலெக்டர் டாகடர் கே.எஸ்.பழனிசாமி நன்றி கூறுகிறார்.

பாதுகாப்பு - வசதிகள் ...

விழா ஏற்பாடுகளை அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், திருப்பூர் மாவட்ட நிர்வாக துறை அதிகாரிகள், மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் சிறப்பாக செய்துள்ளனர். முதல்வர் கலந்துகொள்ளும் விழாவை ஒட்டி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை செய்துள்ளது. விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையிலும், வாகனங்கள் நிறுத்த 4 இடங்களில் வாகன நிறுத்த பகுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து