காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுக்க எல்லா கட்சிகளும் முன்வர வேண்டும் - முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      இந்தியா
Mehbooba Mufti 2017 7 30

ஜம்மு : காஷ்மீரை மீட்டெடுக்க பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் 18-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு  பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மெகபூபா முப்தி பேசியதாவது:

தற்போதைய நிலையற்ற தன்மையில் இருந்து காஷ்மீரை மீட்டெடுக்க பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - மாநில முதல்வர் மெகபூபா முப்தி.

எந்த நோக்கத்துக்காக பிடிபி கட்சி தொடங்கப்பட்டதோ அதனை அடைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். காஷ்மீரில் போலீஸோ, அப்பாவி பொதுமக்களோ யார் கொல்லப்பட்டாலும் அவர் காஷ்மீரிதான். நாம் அனைவரும் ஒன்றே. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இதற்கு தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மக்கள் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரவேண்டும். அரசு இங்கு ஒரு தத்துவார்த்த சவாலை எதிர்கொண்டுள்ளது. எந்த ஒரு கொள்கையையும் அடைத்து வைக்க முடியாது. அதேபோல் அதனைக் கொல்லவும் முடியாது என எனது தந்தை முப்தி முகமது சயீது அடிக்கடி கூறுவார்.

தற்போதைய நிலையற்ற தன்மையில் இருந்து காஷ்மீரை மீட்டெடுக்க பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆதரவளிக்க வேண்டும்.வாகா எல்லை வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் காஷ்மீருக்குள் கடத்தப்படுகின்றன. ஆனால் இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து