முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவூலத்துறை முதன்மை செயலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் - ஆணையர் சு.ஜவஹர், மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர்  தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு, நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற ,மாநிலஅரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, ரூபாய் 288.91 கோடி அரசு நிதியானது ஒப்பளிப்பு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளின் கீழ் சுமார் ஒன்பது இலட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இத்திட்டத்தின் மூலம் அனைத்து பணிப்பதிவேடுகளும் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எளிமையான முறையில் உடனுக்குடன் பதிவு செய்திட வாய்ப்பாக அமையும்.  மேலும் இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 23,600க்கும் அதிகமான பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணைய வழியில் சம்பளப்பட்டியலை கருவூலத்திற்கு சமர்ப்பிக்க இயலும்.  இதன்காரணமாக அரசின் நிகழ்நேர வரவு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மை ஏற்படுவதுடன் , நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,108 அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளன. இப்பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதற்கான பணிகள் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் மூலம் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பணிகளை வருகின்ற செப்டம்பர் -2017க்குள் 100 சதவீதம் நிறைவேற்றிடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் (மின் ஆளுமை) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் அ.பாத்திமாசாந்தா, மாவட்ட கருவூல அலுவலர் அ.கபீபு, நேர்முக உதவியாளர் (கருவூலக்கட்டுப்பாடு) ம.புவியரசு உள்பட அனைத்துத்துறைகளைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து