கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலித்த மூன்று ஆம்னி பஸ்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      தமிழகம்
deepavali special buses 2016 10 26

சென்னை : கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 11 ஆம்னி பஸ்களில் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதிரடி சோதனை

தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள் ரெயிலில் இடம் இல்லாததால் ஆம்னி பஸ்களை நாடி இருக்கிறார்கள். பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் அதிக கட்டண வசூலில் ஈடுபடுகிறார்கள். சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பஸ்களிலும் நிரம்பி வழிந்தன. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


எச்சரிக்கை

வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில் ஆய்வாளர்கள் ஜெய் கணேஷ், ராஜாமணி ஆகியோர் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த ஆம்னி பஸ்சுக்குள் அதிகாரிகள் சென்று பயணிகளிடம் விசாரித்தனர். வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக கொடுத்து பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு பயணிகள் எல்லோரும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதலாக கொடுத்துதான் பயணம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி

பயணிகளின் பயணம் பாதிக்கப்படாத வகையில் அதே பஸ்சில் தொடர்ந்து பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டது. 11 ஆம்னி பஸ்களில் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுத்தனர். கூடுதலாக வாங்கிய கட்டணம் தங்களுக்கு திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியில் பயணம் செய்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் அதிக கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு, வளசரவாக்கம், குன்றத்தூர் பகுதியில் நடந்த சோதனையில் தகுதிச்சான்று, பர்மிட் இல்லாமல் பஸ்களை இயக்கியது தெரிய வந்தது. நேற்று முன்தினம் 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

அமைச்சர் திடீர் ஆய்வு

இதற்கிடையே, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்சு விஜயபாஸ்கர் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளை திடீர் ஆய்வு செய்தார். அதிகக் கட்டணம் வசூலித்த  ஆம்னிப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அமைச்சர் கூறுகையில் தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு, 960 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றி கோயம்பேடு பேருந்து நிலையம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து