முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு: ஒராண்டுக்கு விலக்களிக்கும் அவசர சட்ட முன்வடிவு மத்திய அரசிடம் இன்று சமர்பிப்பு - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் கோரிக்கை ஏற்கப்பட்டதை  அடுத்து, ஒராண்டுக்கு விலக்களிக்கும் அவசர சட்ட முன்வடிவை முதல்வர் எடப்பாடி உத்தரவுப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக  அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மசோதாக்கள் ...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும்படி தமிழக சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த இரண்டு மசோதாக்கள் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பலமுறை டில்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் என்று பலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஒத்துழைக்க தயாராக ...

இந்த நிலையில் சென்னை தாம்பரம் மெப்ஸில் நடைபெற்ற தொழில் அதிபர்களுக்கான ஏற்றுமதி இறக்குமதி குறித்த கருத்தரங்கில் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பங்கேற்றார். அப்போது நீட் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என்று தெரியவந்திருக்கிறது. அதனால் நீட் தேர்வில் இருந்து ஒராண்டுக்கு மட்டும் விலக்களிக்கக்கூடிய வகையில் அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நிரந்தர விலக்கு என்பது சாத்தியமில்லை. மேலும் அரசு மருத்துவமனை கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து ஒராண்டுக்கு விலக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.

பிரதமருக்கு நன்றி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை வரவேற்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். ஒராண்டுக்கு விலக்களிக்கும் இந்த திட்டம் தமிழக அரசுக்கு கிடைத்த முழுமையான வெற்றி என்றும், இதற்கான சட்டமுன்வடிவை தயாரித்து அளிப்பதற்காக அதிகாரிகள் டில்லி செல்ல இருப்பதாகவும், நாளை (இன்று) அவசர சட்டம் டில்லியில் சமர்பிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி, வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் கவுன்சிலிங் முடிந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்புகள் திறக்கப்பட வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முதல்வருடன் ஆலோசனை

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று பிற்பகல் சென்னை கீரின்வேஸ் ரோட்டில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து