Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ கூட்டாக பேட்டி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ கூட்டாக தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலர் தயாரிப்புக்குழுவின் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய இந்த விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டந்தோறும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் பலமுறை சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரும் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் நிறைவு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உறுதியாக பங்கேற்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, சகலை போன்றவர்கள் மீது பல வழக்குகள் இருக்கிறதென்றும், அதன் காரணமாக சிறையில் சசிகலாவை சந்திக்க பயந்ததாக தினகரன் கூறியிருக்கிறார். இது தவறான இட்டுக்கட்டிய கற்பனையாகும். எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி கர்நாடகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கர்நாடகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது குறித்து வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை.

பதவி பிரமாணம் மேற்கொண்ட பிறகு, தண்டனை பெற்ற ஒருவரை சிறையில் சென்று சந்திக்க கூடாது என்பது மரபு, அதன் அடிப்படையில் தான் சிறைக்கு சென்று சசிகலாவை முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை. இந்த நிலையில் பொய்யான தகவலை தினகரன் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. தனக்கு நேர்ந்த தோல்விகளால், கையாளாக தனத்தின் காரணமாக தினகரன் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதேபோன்று பேசினால், நாங்களும் சில செய்திகளை வெளியிட வேண்டி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது. அதன் மீது கருத்து சொல்வது சட்டவிரோதமாகும். சபாநாயகர் மேற்கொண்ட முடிவை விமர்சனம் செய்ய முடியாது. அதன் மீது கருத்து சொல்லவும் முடியாது. நாங்கள் தாயாய் கருதிய முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிர்ச்சியில் இருந்த நாங்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலாவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையை, தேர்ந்தெடுத்திருக்கிறோம். இரவல் தலைமையை தேர்ந்தெடுக்கவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தினகரன் தான் 60 நாட்களில் கட்சியை இணைக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இப்போது நாங்கள் இணைந்து விட்டோம். தினகரன் இதில் என்ன குறை கண்டார். நாங்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு கண்டார் என்று அவர் கேட்டார்.

அமைச்சர்கள் மீது தினகரன் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இருந்தால் சொல்லவேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் இல்லை என்பதால் பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது. சசிகலாவின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானதாக தினகரன் கூறுகிறார். அது தவறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால் அவரது தலைமையை ஏற்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானோம். அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் ஜெயலலிதா தான். அமைச்சரவையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு முழு பொறுப்பாளர் ஜெயலலிதா தான். அவர் தான் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து இந்த ஆட்சியை வரவழைத்தவர். அ.தி.மு.க.வுக்காக எந்த இடத்திலும் தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எனவே அ.தி.மு.க.வுக்கு சொந்தம் கொண்டாட தினகரனுக்கு தார்மீக உரிமையில்லை.

இது அம்மாவின் வழிவந்த அரசல்ல என்று தினகரன் கூறுகிறார். அவர் கடந்த பத்தாண்டுகாலமாக அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார். வனவாசம் போயிருந்தார். எனவே அவருக்கு அம்மாவின் அரசை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இரட்டை இலையை மீட்க தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கமிஷனுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே நாளில் தீர்ப்பு வந்து விடாது. இது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள் அது சத்திய வாக்கு, அந்த வாக்கை கண்டிப்பாக இருவரும் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து