மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்க விழா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      மதுரை
rpu news

மதுரை, -             மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
           மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை சமூக அறிவியல் கல்லூரி ஒரு தன்னாட்சி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. இந்திய தேசிய தரக்கட்டுபாடு நிறுவனத்தால் (நாக் கமிட்டி) முதல்தரம் ஏ கிரேடு பெற்ற கல்லூரியாகும். இந்த கல்லூரி 1969 ம் ஆண்டு காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி டாக்டர் கேப்டன் டி.வி.பி.ராஜா என்பவரால் தொடங்கப்பட்டது. உலக அமைதி முன்னேற்றத்தை உறுதிபடுத்தவும், மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.
        சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த சமூக அறிவியல் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி முன்னாள் மாணவர்கள் இந்த கல்லூரியில் ஒன்றுகூடி தற்போது படித்துகொண்டிருக்கும் மாணவர்களுடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
               இந்தாண்டு மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா, கல்லூரி நிறுவனர் நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நேற்று காந்திஜெயந்தி அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம்.லெட்சுமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.ஜேனட்வசந்த குமாரி வரவேற்று பேசினார். கல்லூரியின் நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜா கல்லூரியன் பொன்விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது கல்லூரியின் 50 ஆண்டு கால வளர்ச்சியையும், அதற்காக தான் எதிர்கொண்ட சிரமங்களையும் அவர் எடுத்துகூறினார்.
           இந்த முப்பெரும் விழாவில் மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் (எம்.எஸ்.டபிள்யூ) பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னோடு படித்த முன்னாள் மாணவர்களையும், தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களையும் சந்தித்து தனது மலரும் நினைவுகளை கல்லூரியில் படித்த நாட்களில் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி அவர்களோடு பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.கே.தமிழரசன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
         இந்த விழாவில் சமூக அறிவியல் கல்லூரியில் படித்து பல்வேறு உயர்ந்த நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர்களும், முன்னாள், இன்னாள் மாணவர்களும், கல்லூரி நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜாவிற்கு 81 வது பிறந்த நாளை முன்னிட்டு சால்வை அணிவித்து அவரிடம் ஆசிபெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.முருகேசன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் செயலாளர் டி.வி.தர்மசிங் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து