ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      ஈரோடு
1

தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்

 அதன்படி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று (05.10.2017) தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பழைய பாசன பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால், புதிய பாசனப் பகுதியான கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளும் என 4 வாய்க்கால்களிலும் முதல் முறையாக ஒரே நாளில் அதிகாலை 5.00 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பாக்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர்த்தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முறை வைத்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக 1100 கனஅடியும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும், மொத்தம் 1700 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. புதிய பாசனப்பகுதியான கீழ்பவானி பாசனத்திட்டத்திற்கு கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் 500 கனஅடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 2300 கன அடி வரை தண்ணீர் வழங்கப்படும்.

பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள 15,746 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கீழ்பாவனித் திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் 

இன்று அக்டோபர் 5 தண்ணீர் திறக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 24 வரை 20 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் 10 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும் என்ற அடிப்படையில் நான்கு முறை நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி மொத்தம் 80 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு 40 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூன், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), .எம்.ஆர்.ராஜா() கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), .தனியரசு (காங்கேயம்), பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை (ஈரோடு) எம்.குழந்தைசாமி, செயற்பொறியாளர் (பவானிசாகர் அணை) செந்தில்வேலன், கண்காணிப்பு பொறியாளர் எஸ்.நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து