டெங்கு நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Uthayakumar 2017 10 10

சென்னை, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் குறித்து 32 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் அலுவலர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். சென்னை எழிலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனும் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.


மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ள போதிலும் அதனை ஒருங்கிணைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட வேண்டும். மழைக்காலங்களில் குப்பை தேங்குவதை அகற்றுவதும், மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்துவதும், தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் நமக்கு இரு வெவ்வேறு அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை சென்னையில் பொழிந்தது. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அதே போன்று 2016-ம் ஆண்டு 140 ஆண்டுகளுக்கு இல்லாத வறட்சியையும் எதிர்கொண்டு திறம்பட சமாளித்துள்ளோம்.

அந்தவகையில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் பிற துறையைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் தமிழக அரசின் சார்பில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு தற்போது 30 லட்சம் வரை இந்த பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் பென்ஷன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தகுதியானவர்களை கண்டறிந்து அந்த அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பொங்கல் பண்டிகையின் போது விலை இல்லா வேட்டி-சேலை வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் பல பணிகளை வருவாய்த்துறை மூலம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளையும் நாம் சிறப்பாக செய்ய வேண்டும். அம்மா திட்டத்தில் வருகை தருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெறும் சான்றிதழ் வழங்கும் முகாமாக அம்மா திட்ட முகாம் இல்லாமல் தமிழக அரசின் சார்பில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்துகிறது என்பது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிற துறையினரையும், அம்மா திட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும். டெங்கு பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையும், உள்ளாட்சித் துறையும் ஈடுபட்டிருந்தாலும் கூட மக்களிடையே நேரடி தொடர்பில் இருக்கும் வருவாய்த்துறையினரும் டெங்கு பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக இயக்குனர் சத்யகோபால், வருவாய்த்துறை இணைய ஆணையர் லட்சுமி உள்பட 32 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து