ரஞ்சி டிராபி கிரிக்கெட்: முரளி விஜய், புஜாரா சதம்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      விளையாட்டு
muralivijaya-pujara 2017 11 10

கட்டாக் : ரஞ்சி டிராபியில் தமிழக வீரர் முரளி விஜய், சவுராஷ்டிர வீரர் புஜாரா ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர். ரகானே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

ரஞ்சி டிராபி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. கட்டாக்கில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் அபிநவ் முகுந்த் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முகுந்த் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து முரளி விஜய் உடன் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக முரளி விஜய் சிறப்பாக விளையாடினார். சதம் அடித்த அவர், 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஜெகதீசன் 88 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.


அடுத்து பாபா இந்திரஜித், விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் முதல்நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் நாளில் தமிழ்நாடு 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 41 ரன்னுடனும், விஜய் சங்கர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் சவுராஷ்டிரா - குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராபின் உத்தப்பா ஸ்னெல் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது உத்தப்பா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஸ்னெல் பட்டேல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது விக்கெட்டுக்களை குஜராத் அணியால் வீழ்த்த முடியவில்லை. சதம் அடித்த இருவரும் முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் சவுராஷ்டிரா 90 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்னெல் பட்டேல் 156 ரன்னுடனும், புஜாரா 115 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். புஜாரா கடந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரோடாவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக விளையாடும் ரகானே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து