முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல்: இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தல்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக மீனவர்கள் மீது, இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் போன்று இனியும் நடைபெறாமல் இருக்க ராணுவ அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 13-ம் தேதியன்று ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப் படகு மூலமாக 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் எங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராணி அபாகா என்ற கப்பலில் வந்த இந்திய கடலோர காவல்படையினர், மீனவர்களின் படகுகளின் நிறுத்தச் சொல்லியுள்ளனர். இதைத் தொடர்ந்து மீன்பிடி படகு மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மீனவர்களுக்கு காயம்

இந்தச் சம்பவத்தில் பிச்சை என்ற மீனவரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு துப்பாக்கிக் குண்டும் மீனவர்களின் படகில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி குண்டானது, மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் தங்களது படகுக்கு வந்து லத்திகள் மற்றும் இரும்பு உருளைக் கொண்டு உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஜான்சன் என்ற மீனவருக்கு இடதுதோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

போராட்ட அறிவிப்பு

காயமடைந்த மீனவர்கள் ராமேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவம், தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பீதியையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. கடலோர காவல் படையினர் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 16-ம் தேதியன்று (நாளை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாக் நீரிணைப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

பதட்டத்தை உருவாக்கி...

தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் பாக் நீரிணை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச் செல்லும் சம்பவங்களை தாங்கள் நன்கு அறிவீர்கள். மீனவர்களை நீண்ட காலத்துக்கு சிறையில் அடைத்து வைப்பதும், அவர்களது படகுகளை விடுவிக்காமல் இருப்பதும் தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்கெனவே உருவாக்கியுள்ளது.

உரிய அறிவுரைகளை...

இத்தகைய சூழலில், இந்திய கடலோர காவல் படையினர் அமைதி காப்பார்களே ஆனால், நமது மீனவர்களை நோக்கி அதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகள் இனியும் மேற்கொள்ளாமல் தவிர்க்கப்படும். எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராணுவ அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து