முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ..2651 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில்கள் தொடங்க சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தம் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் கையெழுத்து

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் ரூ 2651 கோடி மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகள் மேற்கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஐக்கிய பொருளாதார பேரவையின் தொழில் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் தொழில்மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரை  சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் கண்ணாடி தொழிற்சாலைகள் உள்ளிட்ட 6 தொழில் நிறுவனங்கள் ரூ 2561 கோடி மதிப்பீட்டில் தங்களது முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள நேற்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஜெ., அண்டு எஸ்.எஸ்.எஸ் சிங்கப்பூர் என்ற தொழில் நிறுவனம், கண்ணாடி தொழில் குறித்து ரூ 1600 கோடியும் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், பி.பி. ஒ மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றை மேற்கொள்ள யூனிப்ரோ சாப்ட்வேர் என்ற நிறுவனம் ரூ 650 கோடி மதிப்பீட்டிலும், சுகாதாரத்திற்கான மின்வணிகம் மேற்கொள்ள நிஜாம் ஹெல்த் கேர் என்ற நிறுவனம் ரூ 125 கோடி மதி்ப்பீட்டிலும், ஹலால் குளோபல் என்ற நிறுவனம், ரூ 125 கோடி மதிப்பீட்டிலும் ஆயுர்வேத மையம் விளையாட்டு பயிற்சிமையத்திற்கான தொழில் தொடங்குவதற்காக பாரி கேபிடல் மற்றும் டவாலப்பர்ஸ் என்ற நிறுவனம் ரூ 101 கோடி மதிப்பீட்டிலும் துணி மற்றும் அதற்கான பொருட்கள் தயாரிப்பதற்கான பிரிவை தொடங்க கே.ஏ.எஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ரூ 50 கோடியும் ஆக மொத்தம் ரூ 2651 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மூதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிநாட்டு முதலீட்டில் 3 வது இடம்

முன்னதாக ஐக்கிய பொருளாதார பேரவையின் தொழில் மாநாட்டின் நிறைவு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் தொகையை பொறுத்தவரையில் மிகப்பெரிய 7 வது மாநிலமாகவும் இந்தியாவில் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் 2 வது மிகப்பெரிய மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. விரிவடைந்த தொழில்துறை அடித்தளம் கொண்ட படித்தவர்கள், தொழில்திறனில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் . சிறுபான்மையினரும் பெருமளவில் பலன் பெறும் விதத்தில் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வரும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இந்தியாவில் ஜவுளி, தோல், ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் கனரக இலகுரக என்ஜினீயரிங் எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் இணைந்த சேவைகள், சுகாதார பாதுகாப்பு ஆகிய பல்வேறு தொழிற்துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் சேவைப்பிரிவில் தமிழகத்திற்கு அதிக பங்கு உள்ளது. இதேபோல நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு தமிழ்நாட்டுக்கு இன்னும் அதிகமாக வரும். ஆனால் சில வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய தலைமை அலுவலகங்கள் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பதால் நமக்கு வரும் நேரடி முதலீட்டுத் தொகை குறைந்திருக்கிறது.

ஜெயலலிதா நடவடிக்கை

தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னணி மாநிலமாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதில் ஒன்று தான் 2012 ல் அவர் துவக்கிய ‘தொலை நோக்கு திட்டம் 2023 ஆகும் . ’2023 ம் ஆண்டுக்குள் நடுத்தர, மேல் வருமான நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதே இந்த தொலைநோக்கு திட்டத்தின் நோக்கம். அனைவருக்கும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் மூலம் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது இதன் முக்கிய செயல்பாடாகும்.அரசின் பல்வேறு அமைப்புகளும் தொழில்துறையின், பல்வேறு அமைப்புகளும் \ஜெயலலிதாவின்  இந்த தொலை நோக்கு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐக்கிய பொருளாதாரப் பேரவையும் இணைத்துக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது பாராட்டுக்குரியது.

புதிய தொழிற்கொள்கை

பல ஆண்டுகளுக்கு முன்னால் தீர்மானிக்கப்பட்டு அமுலில் இருந்து வந்த பொருளதாரக் கொள்கையை சீரமைக்க வேண்டும் என்று இந்தியா நிர்பந்திக்கப்பட்ட 1991 ம் ஆண்டில் அந்த சந்தர்ப்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி வளரவும், வளர்ச்சியடையவும் களம் இறங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்முடைய கொள்கை திட்டங்களை கால மாற்றத்துக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றிக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறி வந்திருக்கிறோம். நம்முடைய முயற்சிகளை எல்லாம் இரட்டிப்பாக்கி வந்திருக்கிறோம். 2014 ம் ஆண்டில் புதிய தொழிற்துறை கொள்கை செயல்படுத்தப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி உள்பட சூழலுக்கு ஏற்ப வரும் அம்சங்களையும் கருத்தில்கொண்டு கொள்கையை சீரமைத்து செயல்படுத்தி வருகிறோம்.

ஆட்டோ, ஆட்டோ உதிரி பாகங்கள், உயிரி தொழில்நுட்பம், ஏதோ ஸ்பேஸ் ராணுவத் தயாரிப்பு உள்பட புதிய செயல்திட்டங்களும் வரைவுக் கொள்கையில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாம் இன்று நாட்டிலேயே கல்வியில் சிறந்த திறமையான வேலை சக்தியை கொண்ட மாநிலமாக இருக்கிறோம். அதே போல் மாநிலத்தில் சுகாதார அளவுகோல்கள் நாட்டிலேயே சிறந்ததாக அமைந்துள்ளது.  நமது கொள்கையின் காரணமாக மாநிலத்தில் தொழிற்சாலைகள் வளர்ந்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமைதியானதாகவும் சீரானதாகவும் இருக்கிறது.

19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகள் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2014 2015 ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 104 புதிய தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இது 2016 17ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.மாநிலத்தில் முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்த தமிழ்நாடு தொடர்ந்து கடினமாக பணியாற்றி வருகிறது. இதற்காக நாம் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தை வடிவமைத்து வெற்றிகரமாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.

தொழில்மேம்பாட்டு நடவடிக்கைகள்

தற்போது தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் 2 துவக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தொழில் மேம்பாட்டு சமநிலை தமிழகத்தில் தான் உள்ளது. சிறப்பான ஊக்கத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இது முதலீட்டாளரை ஊக்கப்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு காரிடார் திட்டத்திலும் பங்கெடுத்துள்ளோம். சென்னை பெங்களூர் தொழில் காரிடார், சென்னை கன்னியாகுமரி பொருளதார காரிடார் ஆகியவற்றில் பங்கெடுத்து தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் ஒற்றை சாளர முறையை முதலமைச்சர் துவக்கி வைத்து தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை உடனடியாக ஒப்புதல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் மிகப் பெரிய தொழில்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்

தொழில் தொடங்க உகந்த மாநிலம்

மாநிலத்தில் சாதகமான முதலீட்டு சூழல் நிலவி வருவதாக கருதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் தொழில் துவங்க முன் வருகிறார்கள். இந்த யு.இ.எப். வர்த்தக உச்சி மாநாட்டின் மூலம் தமிழகத்தில் முதலீடு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். இந்த மாநாட்டில் 71 ஆயிரத்து 750 கோடி அளவிலான முதலீடுகளை செய்ய முதலீட்டு கமிட்டி அறிவித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2600 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. ஒருங்கிணைந்த சுகாதார நிதி, தனியார் சமநிதி, சரியா நிதி ஆகியவற்றின் வழியாக முதலீடுகளை யு.இ.எப். மேம்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கட்டமைப்பு நிதி அமைப்பை செபி ஒப்புதலுடன் செயல்படுத்தி வருகிறோம்.தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனமானது அரசின் பல்வேறு அமைப்புகளுடனும் தனியாருடனும் இணைந்து தொழிற்சாலைக்கான தண்ணீர், தொழிற்பூங்கா, மெகா கிரீன் எனர்ஜி மற்றும் அது தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக உள்ளூர் முதலீட்டாளர் மூலம் நிதி சேகரிக்கப்படுகிறது. முதல் முதலீடு திட்டம் அடுத்த காலாண்டுக்குள் செயல்படுத்தப்படும். தற்போது சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர், முன்னதாக பேரவையின் தலைவர் அகமது ஏ.ஆர். புகாரி, பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள், தமிழக தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து