முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அணிக்கே 'இரட்டை இலை' சின்னம்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், சின்னத்தை ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியை தமிழகம் முழுவதம் அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சின்னம் முடக்கம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன. வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது.

அணிகள் இணைந்தன

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டனர்.

ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் அணிக்கு...

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பும், டி.டி.வி.தினகரன் தரப்பும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான லட்சகணக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பிலும் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனையடுத்து பலகட்டங்களாக தேர்தல் ஆணையத்தில் இறுதிகட்ட விசாரணை நடைப்பெற்றது. விசராணைக்குப்பின் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தலைமை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், நேற்று இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சின்னம் என்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

சின்னம் தொடர்பான 83 பக்கங்கள் கொண்ட  இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை.

முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு பெரும்பான்மை உள்ளதால் சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க என்ற பெயரை பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தவும் அனுமதி அளித்து அதிகார பூர்வமாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.இரட்டை இலையை முடக்கி மார்ச் 22-ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம். பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் முதல்வர் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. தினகரன் அணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொண்டர்கள் உற்சாகம்

மீண்டும் சின்னம் கிடைத்ததால் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதனைடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து