முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்1-பி விசாவிற்கான ஊதிய வரம்பு உயர்வால் இந்திய ஐ.டி நிறுவனங்கள் கலக்கம்

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்,  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எச்1-பி விசா பெறுவதற்கான குறைந்த பட்ச ஊதிய வரம்பை அமெரிக்கா 60000 டாலரில் இருந்து 90000 டாலராக உயர்த்தி உள்ளது.

 அமெரிக்க அரசின் இந்த புதிய முடிவு இந்திய தகவல் தொழில்நுட்பதுறை நிறுவனங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அமெரிக்காவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக எச்1-பி விசாவின் மூலமாகவே சென்றுவந்தனர். இந்த நடைமுறையானது ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தவரையிலும் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் சுமூகமாக இருந்துவந்தது.

எச்1-பி விசா முறையில் மாற்றம்

புதிய அதிபராக டொனால்டு டிரம்ப பதவி ஏற்ற பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உடனேயே முதல் வேலையாக எச்1-பி விஷயத்தில்தான் கையை வைத்தார். இனிமேல் எச்1-பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக தடாலடியாக அறிவித்தார். கூடவே, அமெரிக்காவில் உள்ள அந்நிய நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களுக்கு அமெரிக்கர்களையே பணியமர்த்தவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்தார்.

டொனால்டு டிரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவால், இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்தன. இந்திய பங்குச்சந்தைகளிலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடும் சரிவை சந்திக்க நேர்ந்தது. இந்திய ஐடி நிறுவனங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சார்பாக டிரம்ப்பிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கூடவே அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு திறமையான தகுதிவாய்ந்த அமெரிக்கர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததால், அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த டிரம்ப்பும் சற்று இறங்கி வந்தார். 60000 டாலர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச்1-பி விசா வழங்கும் விதிமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தினார். இருந்தாலும், எச்1-பி விசா பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60000 டாலர்கள் என்று நிர்ணயித்தார்.

இதனால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சற்று கலக்கம் அடைந்தன.  தற்போது இந்த ஊதிய வரம்பை 60000 டாலரில் இருந்து 90000 டாலராக உயர்த்தி உள்ளது. இதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் சபை  நேற்றுமுன்தினம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது, இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் பணியாற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை பொறியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு  என்ற சட்டத்தின் மூலம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மாற்றாக அமெரிக்கர்களை பணியமர்த்துவதை உறுதி செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.

இந்த சட்டமானது எச்1-பி விசாவை நம்பி இருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கவேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் இயற்றப்பட்டது என்று ராவ் ஆலோசனை குழுமம் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ்கமல் ராவ் தெரிவித்தார். மேலும், இந்த புதிய சட்டமானது குறைந்தபட்ச ஒப்பந்த ஊதியத்தில் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களை கடுமையாக பாதிக்கும் செயலாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து