முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரஸ்பர விவாகரத்துக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை: பரஸ்பர விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க தேவையில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  உரிய பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகு கணவர் மது குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்த தொடங்கினார். பணம், நகைகளை கேட்டு துன்புறுத்தினார். வீட்டை விட்டு வெளியேற்றினார். என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார்.
 
இதனால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். எனக்கு விவாகரத்து வழங்க கணவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இருப்பினும் விவாகரத்து வழங்காமல் என் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதை விசாரித்து நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில்,

உரிய பிரிவுகளின் கீழ் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுவது தவறு அல்ல. சில காலம் காத்திருப்புக்கு பிறகு கணவன், மனைவி மீண்டும் சேர்வதற்கும், விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளதால் அவ்வாறு கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு அப்படியில்லை. மனைவிக்கு விவாகரத்து வழங்க கணவர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர நான்கு ஆண்டுகளாக கணவர் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மனைவியுடன் சேர்ந்து வாழவும் கணவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. பெண்களை பொறுத்தவரை எதிர்காலத்தில் நல்ல திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு காலம் முக்கியமானது. ஒவ்வொரு நாள் தாமதமும் நல்ல திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

திருமணம் என்பது விரைவில் நடைபெற வேண்டிய ஒன்று. அதை தொழில்நுட்பக் காரணங்களை கூறி தாமதப்படுத்துவது சரியல்ல. விவாகரத்து வழக்குகள் ஆண்டு கணக்கில் முடியாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் பள்ளி குழந்தைகள், அரசு பணியில் உள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். விவாகரத்து வழக்குகள் 2 முதல் 12 ஆண்டுகள் வரை நடைபெறுகிறது. விவாகரத்து வழக்குகளில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவே உரிமையியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் விவாகரத்து வழக்குகள் முடிவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் இரு தரப்பினரின் நலன் கருதி நீதிமன்றங்கள் விரைவில் முடிவெடுக்க வேண்டும். காலத்தில் முடிவெடுப்பதால் நேரம், பண விரையம் தடுக்கப்படும். விவாகரத்து பெறுவதற்கு 6 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை என ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பரஸ்பர விவாகரத்து கேட்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இந்த வழக்கை தாக்கல் செய்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு வழியில்லை.  எனவே மனுதாரருக்கு 2013-ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து